169.

    தேவ நேசனே சிறக்கும் ஈசனே
    பாவ நாசனே பரம தேசனே
    சாவ காசனே தணிகை வாசனே
    கோவ பாசனே குறிக்கொ ளென்னையே.

உரை:

     தணிகைப் பதியில் எழுந்தருளுபவனே, தேவர்கட்கு அன்பனே, மேன்மேல் மிகும் அருட் செல்வனே, பாவத்தைப் போக்குபவனே, மேலான ஞானவொளி யுடையவனே, என்னோடு உடனாயிருப்பவனே, கோபத் தொடர்பில்லாதவனே, எளியனாகிய என்னைக் குறிக்கொண்டு அருள் வாயாக, எ. று.

     வாசன் - வசிப்பவன். நேசன் - அன்பன். ஈசன்- அருட் செல்வமுடையவன். தேசன் - ஒளி யுடையவன். ஒளி, ஈண்டு ஞானப் பேரொளி மேற்று. சக வாசன் என்பது சாவகாசன் என வந்தது. சகவாசம் உடனிருத்தல். கோவாபாசன் என்பது கோவ பாசன் என வந்தது. அபாசன்-தொடர்பில்லாதவன். குறிக் கொள்ளல்-பொது நோக்காமல் அருளுதல்.

     இதனால் பொதுவாக வன்றிச் சிறப்பாக நோக்கி அருள வேண்டியவாறாம்.

     (19)