1690. திருக்கண் நுதலால் திருமகனைத்
தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர்
எருக்க மலரே சூடுவர்நீ
எழில்மல் லிகைஎன் றெண்ணினையால்
உருக்கும் நெருப்பே அவர்உருவம்
உனக்கும் அவர்க்கும் உறவாமோ
இருக்க மயல்கொண் டெதுபெறுவாய்
ஏழை அடிநீ என்மகளே.
உரை: என் மகளே, அழகிய நெற்றியிடத்துக் கண்ணினால் திருமகட்கு மகனாகிய காமனை எரித்தொழுத்தவரும், திருவொற்றியூரை யுடைய தேவதேவருமான சிவபெருமான் எருக்கம்பூவைச் சூடிக் கொள்பவராக, நீ அழகிய மல்லிகை மலரைச் சூடுவரென நினைக்கின்றாய்; மேலும் அவரது திருவுருவம் யாவற்றையும் வெம்மையால் உருக்கும் தீயின் வண்ணமாகும்; ஆகவே உனக்கும் அவர்க்கும் காதலுறவு உண்டாக இடமில்லை; அங்ஙனமாக, அவரைக் கூடியிருக்க வேட்கை மயக்கம் கொள்வதாற் பயனில்லை; இதனை யறியாமையால் நீ ஏழையாவாய். எ.று.
திருக்கண்ணுதல் - திருநுதற் கண் என மாறி இயைக்க. காமவேள் திருமாலுக்கும் திருமகட்கும் பிறந்த மகன் என்று புராணம் கூறுவதுபற்றித் 'திருமகன்' எனக் குறிக்கின்றாள். காமவேளைச் சினந்து நெற்றிக்கண்ணால் சிவன் எரித்தொழித்தார் என நிலவும் வரலாறு கொண்டு, “திருக்கண்ணுதலால் திருமகனைத் தீர்த்தார்” எனத் தெரிவிக்கின்றாள். எருக்கம் பூ சிவன் விரும்பியணியும் மலராதலால், “எருக்க மலரே சூடுவர்” என உரைக்கின்றாள். குண்டு மல்லிகைபோல் இதழ் குவிதலின் எருக்கம் பூவை நினைந்தவள், “எழில் மல்லிகையென் றெண்ணினை” என எடுத்துரைக்கின்றாள். மணத்தாலும் நிறத்தாலும் அழகு மிக்கதாகலின், “எழில் மல்லிகை” எனச் சிறப்பிக்கின்றாள். கருங்கல்லையும் நிலவுருண்டைக் குள்ளிருக்கும் நெருப்பு நீராய் உருக்குதலின், “உருக்கும் நெருப்பு” எனவுரைக்கின்றாள். சிவன் திருமேனி நிறம் தீ வண்ணமாதலால், “உருக்கும் நெருப்பே அவருருவம்” என இயம்புகிறாள். நெருப்பை எப்பொருளும் சேராது என்பதுபற்றி, “உனக்கும் அவர்க்கும் உறவாமோ” என மறுக்கின்றாள். பெற்றியதுவாக இருக்க, அவரைக் கூடியிருக்க விழைந்து மையலுறுவது பேதமை என்பாள், “இருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழையடி நீ என் மகளே” என்று இடித்துரைக்கின்றாள். (5)
|