1691. மேலை வினையைத் தவிர்த்தருளும்
விடையார் ஒற்றி விகிர்தர்அவர்
மாலை கொடுப்பார் உணங்குதலை
மாலை அதுதான் வாங்குவையோ
ஆல மிடற்றார் காபாலி
ஆகித் திரிவார் அணைவிலரே
ஏல மயல்கொண் டென்பெறுவாய்
ஏழை அடிநீ என்மகளே.
உரை: என்னுடைய மகளே, முன்னை வினைகளின் தொடர் பறுத்தருளுபவராய் விடையேறும் பெருமானும், ஒற்றியூரில் எழுந்தருளும் விகிர்தருமாகிய சிவபெருமான், தன்பால் அன்புகொள்பவர்க்குத் தான் அணியும் மாலையைக் கொடுப்பாராயினும், அது தலைமாலையாதலால், நீ அதனை வாங்க மாட்டாயன்றோ? விடம் பொருந்திய கழுத்தையுடையவராய்க் கையிற் கபாலம் ஏந்தியவராய் எங்கும் திரியும் இயல்பினராதலால் நின்னைக் கூடி மகிழார்; அவரைப் பொருந்த விழைந்து காதல் மயக்கமுறுதலால் யாது பயன்? எ.று.
முன்னைப் பிறவிகளிற் செய்த வினைகளின் தொடர்பறுத்துத் திருவருள் ஞானம் எய்துவிக்கும் பெருமானாதல் விளங்கச் சிவபெருமானை, “மேலை வினையைத் தவிர்த்தருளும் விடையார்” எனப் புகல்கின்றாள். அப்பெருமான் தன்பால் அன்பு செய்பவர்க்கு மாலை தந்து மகிழ்விப்பது பண்பாதலின், “மாலை கொடுப்பார்” எனத் தனது இசைவு புலப்படக் கூறுபவள், மறுக்கும் குறிப்பால், அவர் அளிப்பது இறந்துபட்ட தேவர்களின் தலைமாலையாதலால் அதனை அணிந்துகொள்ள விரும்புவாயோ என வினவுவாளாய், “உணங்கு தலைமாலை யதுதான் வாங்குவையோ” என வுரைக்கின்றாள். ஆலம் - நஞ்சு. மிடறு - கழுத்து. கபாலம் - பிரமன் தலையோடு. கபாலத்தை யேந்துபவன், காபாலி. காபாலியாதல், தலையோட்டைக் கையிலேந்தி உண்பலி ஏற்பவனாதல். காபாலி காம வேட்கையனாகான் என்பது கருத்து. ஏலுதல் - பொருந்துதல். (6)
|