1692.

     மாகம் பயிலும் பொற்பணைகொள்
          வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
     யோகம் பயில்வார் மோகமிலார்
          என்னே உனக்கிங் கிணங்குவரே
     ஆகம் பயில்வாள் மலையாளேல்
          அவளோ ஒன்றும் அறிந்திலள்காண்
     ஏக மயல்கொண் டெதுபெறுவாய்
          ஏழை அடிநீ என்மகளே.

உரை:

      என் மகளே, வானளாவும் சோலைகளும் மருதவயல்களும் பொருந்திய வளமிக்க திருவொற்றியூரில் எழுந்தருளும் தியாகப் பெருமான், யோகம் புரிவரே யன்றிக் காமமோகம் உடையவரல்லர்; உன்னைச் சேர்தற்கு இசைவரெனக் கருதுவது என்னை? அவர் திருமேனியில் கூறுடையவளான மலைமகளோ வெனின், அவள் காதற் சுவை சிறிதும் அறியாள்; மிக்க மயல் கொண்டியலும் நீ அவர்பால் யாது பெறுவாய்; நீ மிக்க ஏழையாயினாய். எ.று.

     மாகம் - வானம். வானளாவ உயர்ந்த சோலை என்றற்கு, “மாகம் பயிலும் பொழில்” என்று கூறுகிறாள். யோகமே விரும்புவதுபற்றிச் சிவனை “யோகம் பயில்வார்” எனவும், மகளிர் போகத்தை நயவாமையால் “மோகமிலார்” எனவும் உரைக்கின்றாள். “நல்ல போகத்தன் யோகத்தையே புரிந்தான்” (நல்லூர்ப்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. சிவன் திருவுருவில் இடப்பாகத்தைக் கொண்டமையின், உமையம்மையை “ஆகம் பயில்வாள் மலையாள்” என்றும் இசைக்கின்றாள். ஏக மயல் - மிக்க மயல். நீ மையலுறுவதால் ஒரு பயனும் இல்லையென்பாள், “எது பெறுவாய்” எனக் கழலுகின்றாள்.

     (7)