1693. விண்பார் புகழும் திருவொற்றி
மேவும் புனிதர் விடந்தரினும்
உண்பார் இன்னும் உனக்கதுதான்
உடன்பா டாமோ உளமுருகித்
தண்பார் என்பார் தமையெல்லாம்
சார்வார் அதுஉன் சம்மதமோ
எண்பார் மயல்கொண் டெதுபெறுவாய்
ஏழை அடிநீ என்மகளே.
உரை: என் மகளே, விண்ணவரும் மண்ணவரும் புகழ்ந்து போற்றும் திருவொற்றியூரில் எழுந்தருளும் தூயவரான சிவபெருமான், நஞ்சினை யளித்தாலும் மறாது உண்பாராகலின், அச்செயல் உனக்கு இசைவாகுமா? அன்பால் உள்ளமுருகித் தண்ணிய இயல்புடையார் யாவரையும் ஒப்ப விரும்பி அவர்பாற் செல்வர்; அது வுனக்கும் சம்மதமாகுமோ? மனத்தின்கண் அவர்பாற் காதல் மயக்குற்று நீ யாது பெறுவாய்; நீ ஒரு பேதையாவாய். எ.று.
விண் பார் : ஆகுபெயராய் முறையே தேவர்களையும் மண்ணவரையும் குறிக்கின்றன. புனிதர் - தூயவர். கடல் கடையப்பட்ட அந்நாளில், அதன்கண் எழுந்த நஞ்சு கண்டு அஞ்சிய தேவர் வேண்ட, அவர்களை அளித்தற் பொருட்டு அதனையுண்டருளிய செய்தி நினைந்து, இப்போதும் அன்பால் நஞ்சு கொடுப்பினும் சிவபிரான் உண்ணும் இயல்பினரென்பாள், “விடம் தரினும் இன்னும் உண்பார்” என்றும், அதனை ஏற்றற்கு நீ மனம் பொறாயன்றோ என்பாளாய், “உனக்கு அதுதான் உடன்பாடாமோ” என்றும் உரைக்கின்றாள். தண்பார் - தண்பு ஆர் எனப் பிரிந்து, தண்ணிய பண்பினரான மெய்யன்பர் எனப் பொருள்படும். தண்பு - தட்பப் பண்பு; ஈர நெஞ்சினரான மெய்யன்பர் என்பது கருத்து. உயர்பண்பினர் கீழோர், ஆடவர் பெண்டிர், பெரியோர் சிறியோர் என்ற வேறுபாடின்றி யாவரிடமும் சென்றருளும் தகைமையுடையராகலின், வேறுபாடு கண்டு தக்காங்கொழுகும் உனக்கு அஃது ஒவ்வாதென்பாளாய், “தண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுவுன் சம்மதமோ” என வினவுகின்றாள். எண்பார் - எண்ணத்துக்கு இடமாகிய மனம். இங்ஙனம் மாறான இயல்புடைய அப்பெருமானைக் காதலிப்பது பயன்படாதென்று வலியுறுத்தற்கு “மயல் கொண்டு எது பெறுவாய்” எனக் கழலுகின்றாள். (8)
|