1694. நீடி வளங்கொள் ஒற்றியில்வாழ்
நிமலர் உலகத் துயிர்தோறும்
ஓடி ஒளிப்பார் அவர்நீயும்
ஒக்க ஓட உன்வசமோ
நாடி நடிப்பார் நீயும்உடன்
நடித்தால் உலகர் நகையாரோ
ஈடில் மயல்கொண் டெதுபெறுவாய்
ஏழை அடிநீ என்மகளே.
உரை: என் மகளே, நீண்ட வளம் பொருந்திய திருவொற்றியூரில் எழுந்தருளும் நின்மலராகிய சிவபெருமான், உலகிலுள்ள உயிர்தோறும் உணர்விற் கலந்து மறைந்து உறைவராகலின், அவரைப் போல் கலந்து நிற்பது உன்னாலாகாதே; ஐவகைத் தொழில்களை யெண்ணி அம்பலத்தில் நடிப்பவராக, அவரைப்போல் நீயும் நடிக்கலுற்றால் உலக மக்கள் உன்னை எள்ளி நகைப்பரன்றோ? அவர்பால் ஒவ்வாத காதல் மயக்க முற்று நீ பெறும் பயன் யாதுமில்லை; நினது ஏழைமையை என்னென்பது? எ.று.
நெடுங் காலமாக வளம் சிறந்து விளங்குவது தோன்ற “நீடி வளங்கொள் ஒற்றி” என்றுரைக்கின்றாள். நிமலர் - நின்மலர்; மலமில்லாதவர் என்பது கருத்து. உயிர்களிடத்து உணர்வின்கண் உணர்வாய்க் கலந்திருப்பது பற்றி, “உலகத் துயிர்தொறும் ஓடி ஒளிப்பார்” எனக் கூறுகிறாள். “உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி” (ஆரூர். மூலட்) எனத் திருநாவுக்கரசர் கூறுவது காண்க. உலகம் நிலைபெறும் பொருட்டுப் படைத்தல் முதலிய தொழிலைந்தையும் திருவுள்ளத் தெண்ணிச் செய்வது கொண்டு, “நாடி நடிப்பார்” என நவில்கின்றாள். நடிக்கும் இடமாதலின் 'அம்பலம்' வருவிக்கப்பட்டது. அவரது திருநடம் பிறர் எவரும் நடிக்கவொண்ணாத அற்புதத் தனிக் கூத்தாதலால், “நீ உடன் நடித்தால் உலகர் நகையாரோ” எனக் கழறுகின்றாள். ஈடில் மயல் - ஒவ்வாக் காதல் மயக்கம்; இலக்கணங்கள் பொருந்தாப் பெருந்திணைக் காமம் என்பதும் இதனையே என அறிக. (9)
|