93. காதற் சிறப்புக் கதவா மாண்பு
தலைவி
கழற்றெதிர் மறுத்தல்
திருவொற்றியூர்
அஃதாவது
காதலன்பு மிகுதலால் தன்னைக் கழறி விலக்குவாரை வெகுண்டுரையாமல், தன் உட்கோளை இனியவாகக்
கூறும் நற்பண்பு. கதவுதல் - சினத்தல். “ஊடினும் இனிய கூறும் இன்னகை” (பதிற். 16) என
உயர்நிலை மகளிரின் மாண்பைச் சான்றோர் கூறுதல் காண்க. “கதுவா மாண்பு” என்பது,
ஏடெழுதினோரால் நேர்ந்த பிழை. தனது காதல் பயன் படாது எனக் கழறிக் கூறிய செவிலிக்கு
எதிர்மாற்றம் வருமுகத்தால், தனது காதலுள்ளக் கருத்தை எடுத்தோதி நங்கை
வற்புறுத்துகின்றாளாகலின், “தலைவி கழற்றெதிர் மறுத்தல்” எனத் துறை கூறுகிறது. இங்கே பாட்டுத்
தோறும் தன் காதன்மையை நங்கை வலியுறுத்துகின்றாள் என அறிக. கதுவா மாண்பு என்றே கொண்டு
குறையாத மாண்பு எனக் கொள்ளலுமாம், “கதுவாய் படநீர் முகந்து” (திவ்ய. பெரி. 3 : 5 : 4)
என வருவது காண்க.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 1696. உலகம் உடையார் தம்ஊரை
ஒற்றி வைத்தார் என்றாலும்
அலகில் புகழார் காபாலி
ஆகத் திரிந்தார் என்றாலும்
திலகம் அனையார் புறங்காட்டில்
சேர்ந்து நடித்தார் என்றாலும்
கலக விழியாய் நான்அவர்மேல்
காதல் ஒழியேன் கனவினுமே.
உரை: கலகம் புரியும் பார்வையையுடைய தோழி, உலகனைத்தையும் உடைமையாக வுடையவராய்த் தமது ஊரையே கடனுக்கு ஒற்றி வைத்தாரெனப் புராணிகர் கூறினாலும், அளவில்லாத புகழ்படைத்த அப்பெருமான் காபாலியாய் வீடுதோறும் சென்று இரந்தலைந்தார் என இகழ்ச்சியுண்டாகப் பேசினாலும், திலகம் போன்றவராகிய அவர் சுடுகாட்டில் பேய்க் கணங்களோடு கூடிக் கூத்தாடினாரெனச் சிலர் உரைக்கினும், அவர்பாற் கொண்ட காதலன்பைக் கனவிலும் மறவேன் என அறிக. எ.று.
காணப்பட்டார் மனத்திற் காம நினைவுகளை எழுப்பி வருத்தும் பார்வையுடைமை பற்றிக் “்கலக விழியாய்” என்று சொல்லுகிறாள், சுழலும் விழிகளையுடைய கண் எனினும் பொருந்தும். “இந்த அகில மெல்லாம் உடையார் என்று நினைந்தனை ஊர் ஒற்றி அவர்க்கென்றுணர்ந்திலையே” (1686) எனச் செவிலி பழித்தமையால், “உலக முடையார் தம்மூரை ஒற்றி வைத்தாரென்றாலும்” எனக் கொண்டெடுத்து மொழிகின்றாள். “ஆல மிடற்றார் காபாலியாகித் திரிவார் அணைவிலரே” (1691) என்றமையால், “அலகில் புகழார் காபாலியாகித் திரிந்தார் என்றாலும்” என்று இயம்புகிறாள். “கள்ளி நெருங்கிப் புறங்கொள் சுடுகாடே இடங் காண் கண்டறி நீ” (1695) என்று எள்ளிப் பேசினமையால், “திலக மனையார் புறங்காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும்” எனவுரைக்கின்றாள். திலகம் - மேன்மை. “இருந்தனன் திலக மன்னான்” (சீவக. 1170) என்பது காண்க. பேய்க் கணங்களுடன் கூடியாடுதலால், சேர்ந்து என்பதற்குப் 'பேய்க் கணத்தொடு கூடி' என உரைக்க வேண்டிற்று. கற்புச் சிறப்பால் நங்கை கதமுறாது விளம்புகின்றாள். கதம் - சினம்.
இதனால், நங்கையின் மறுத்துரை காதற் சிறப்பால் கதவா மாண்பு பெறுதல் காண்க. (1)
|