1699. என்னை உடையார் ஒருவேடன்
எச்சில் உவந்தார் என்றாலும்
அன்னை அனையார் ஒருமகனை
அறுக்க உரைத்தார் என்றாலும்
துன்னும் இறையார் தொண்டனுக்குத்
தூதர் ஆனார் என்றாலும்
கன்னி இதுகேள் நான்அவர்மேல்
காதல் ஒழியேன் கனவினுமே.
உரை: கன்னியாகிய தோழி, யான் உரைக்குமிதனைக் கேள்; என்னைத் தனக்கு அடிமையாகவுடைய சிவபெருமான் கண்ணப்பனென்ற வேடன் எச்சில் பண்ணித் தந்த ஊனுணவை உவப்புடனே யுண்டார் என்று சொன்னாலும், உயிர்கட்குத் தாய்போலன்பர் என்று சொல்லி, மாறாகச் சிறுத்தொண்டருடைய ஒரு மகனை அறுத்துச் சமைக்கச் சொன்னாரென இகழினும், எவ்வுயிரினும் கலந்து தங்கும் இறைவராகியும், நம்பியாரூரராகிய தொண்டர் பொருட்டுத் தூதரானாரென்று சொல்லிப் பழித்தாலும், நான் சிவன்மேற்கொண்ட காதலைக் கையொழியேன். எ.று.
கன்னி - மணமாகாத இளம்பெண். இகழ்வது நோக்கமாகலின், கண்ணப்ப தேவரைக் குலம் குறித்து “ஒரு வேடன்” எனவும், உண்டு சுவை தேர்ந்தளித்த ஊனுணவை “எச்சில்” எனவும், அதனை வெறாது சிவனுண்டதை “உவந்தா”ரெனவும் செவிலி கூறினாளாக, அவ்வாறே நங்கை கொண்டுரைக்கின்றாள். அன்புருவாயவ னாதலின், சிவனை “அன்னையனையார்” என்று இயம்புகிறாள். ஒரு மகன் - சீராள தேவன். அறுக்க உரைத்தது: “குடிக்கோர் சிறுவனுமாய்க் கொள்ளும் பிராயம் ஐந்துளனாய், உறுப்பிற் குறைபாடின்றித் தாய், பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்க” (சிறுத். 54) வேண்டும் என்றது. அன்புருவனாயினும் வன்கண்மையுடையவன் என்று இகழ்வது குறிப்பு. எவ்வுயிரினும் தோய்ந்து கலந்து தங்குவதால் சிவனைத் “துன்னும் இறையார்” என்று கூறுகின்றாள். இறைவராகியும் வன்றொண்டராகிய சுந்தரர்க்குத் தூதரானது சொல்லிப் பழிப்பது தோன்ற, “தொண்டனுக்குத் தூதரானார் என்றாலும்” என்கின்றாள். கதமுற்றுக் கூறாமல், “காதலொழியேன் கனவினுமே” என்பது கதவா மாண்பு என்க. (4)
|