17.

    உப்புற்ற பாண்டமென வொன்பது துவாரத்துள்
        உற்றசும் பொழுகு முடலை
        உயர்கின்ற வானிடை யெறிந்தகல்லென்றும் மலை
        யுற்றிழியு மருவி யென்றும்
    வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகமுறு
        மின்னென்றும் வீசு காற்றின்
        மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினை தந்த
        வெறுமாய வேட மென்றும்
    கப்புற்ற பறவைக் குடம்பை யென்றும் பொய்த்த
        கனவென்றும் நீரி லெழுதும்
        கையெழுத் தென்றுமுட் கண்டு கொண்டதி லாசை
        கைவிடே னென் செய்குவேன்
    தப்பற்ற சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

உரை:

     தப்பில்லாத சென்னைக் கந்த கோட்டத்துள் விளங்கும் கோயிலை இடமாகக் கொண்ட கந்தப் பெருமானே, தண்ணிய வொளியுடைய தூய மணிகளில் மிக்க ஒளியுடைய சைவமணியாகிய சண்முகம் கொண்ட தெய்வ மணியே, உப்பு வைத்த மட்பாண்டம் போலப் புறத்தே நீரும் சீயும் கசியும் இவ்வுடம்பை, உயர்ந்த வானத்தில் எறிந்த கல் போல்வ தென்றும், மலையினின்று வீழும் அருவி போல்வ தென்றும், வெய்தாய் வீசும் காற்றில் ஏற்றி வைத்த விளக்குப் போல்வ தென்றும், மழை மேகத்திற் றோன்றும் மின்னல் போல்வ தென்றும், நைந்து வீசும் காற்றிற் பறக்கும் பஞ்சி போல்வ தென்றும், மஞ்சு போல்வ தென்றும், வினையால் உருவாகி வந்த வெறுவிதான பொய் வேட மென்றும், மரக் கிளையிற் கட்டப்பட்ட பறவைக் கூடு போல்வ தென்றும், பொய்க் கனவை ஒப்ப தென்றும், நீர்மேல் கையால் எழுதப்படும் எழுத்தை நிகர்ப்ப தென்றும் கண்டு வைத்தும் அதன்மேல் உள்ள ஆசை விடா தொழுகுகின்றேன்; வேறு ஒன்று செய்வதறியேன், எ.று.

     வளத்தாலும் இருக்கையாலும் குறைபா டில்லாமையால் “தப்பற்ற சென்னை” என்று புகழ்கின்றார். உப்பிருக்கும் பாண்டத்தில் புறத்தே நீர் கசிவது போலப் புறத்தே வியர்வை நீரும், மூக்கிற் சளியும், புண்ணிற் சீயும் கசிதலால் உடம்பை, “உப்புற்ற பாண்டமென” ஒப்புமை கூறுகின்றார். கண்ணிரண்டு, காது இரண்டு, மூக்கு இரண்டு, வாய் ஒன்று, குறி ஒன்று, மலவாய் ஒன்று ஆகத் துவாரம் ஒன்பது. இவற்றின் வாயிலாக வழும்பும் நீரும் ஒழுகுதல் பற்றி, “ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகு முடல்” எனக் குறிக்கின்றார். உயர்திணை யென்றாற் போல வானம் “உயர்கின்ற வானம்” என்றும், வானத்தே எறிந்த கல் நிலத்தே வீழ்தல் தப்பாதவாறு போல உயர்திணை யுடம்பு ஒருநாள் வீழ்ந்தே தீர்வதாம் என்பது பற்றி, உடலை “உயர்கின்ற வானிடை எறிந்த கல்” என்று உரைக்கின்றார். உயர்கின்ற வானம், உயர்வில் இருக்கின்ற வானம் என்க. “வல்லா ஒருவன் கைம் முயன் றெறியினும், மாட்டா ஒருவன் வாளா எறியினும், நிலத்தில் வழாக் கல்லே” (திரு விடை. மும்மணி.) என்று பட்டினத் தடிகள் உரைப்பது காண்க. மலையிற்றோன்றும் அருவி கீழ் நோக்கி வீழ்தல் போல உயர்ந்து நிமிர்ந்த உடல் முதுமைக்கண் தலை சாய்ந்து கீழ் நோக்கி வீழ்தலால் உடலை, “மலையுற்றிழியும் அருவி” என்று கூறுகிறார். வெய்தாய மூச்சு விட்டு நிலையின்றி அவிவதால் உடலை, “வெப்புற்ற காற்றிடை விளக்கு” என்று கூறுகிறார். வெப்பக் காலத்தில் சூறைக் காற்று வீசுவதால் “வெப்புற்ற காற்” றெனப்படுகிறது. காற்றிடை ஏற்றிய விளக்குச் சிறிது போதில் அவிந்து படும். மின்னல் தோன்றுவது மழை மேகத்திலாத லறிக. தோன்றிய வுடல் சிறிது போதில் மறைதற்கு மின்னல் உவமையாகிறது. வானவில் வனப்புறத் தோன்றி நின்று மறைவதுபோல, உடம்பும் அழகுடன் தோன்றி மறைவ தென அறிக. வானிடு வில்லைப் பிறரும் உடற்கு உவமம் செய்வர். வீசும் காற்றில் உலவும் பஞ்சி போல மூச்சுக் காற்றில் உலாவுதலால், அதனை எடுத்துக் காட்டுகிறார். வினைப்பயன் நுகர்ச்சிக்கும் வினை விளைவுக்கு மென்றே இவ்வுடம்பு தோன்றுதலால், “வினைதந்த வெறுமாய வேட” மென்று விளம்புகிறார். மனமொழி மெய் யென்னும் மூன்றும் வினை செய்தலையே தொழிலாக இருத்தலாலும், வினை நீக்கத்தில் மறைந்து கெடுதலாலும், வேறு செயலின்மையாலும் “வினைதந்த வெறும் மாய வேடம்” என்று இயம்புகிறார். மரத்தின் சிறு கிளை கப்பு என வழங்கும். குடம்பை - கூடு. புள்ளினம் தங்குதற் கமைத்த கூடு போல உயிரினம் உலகில் தங்குதற் கமைந்தமையால் “கப்புற்ற பறவைக் குடம்பை” என்று கூறுகிறார். “குடம்பை தனித் தொழியப் புட் பறந்தற்று” (குறள்) என்பர் திருவள்ளுவர். புள்ளின் கூட்டைக் குடம்பை என்பது போல உயிர்களின் உடம்பைக் “குரம்பை” என்பர். பொய்த்த கனவு, பொய்க்கனா. “நீரில் எழுத்தாகும் யாக்கை” எனக் குமரகுருபரர் முதலியோர் மொழிதலால், “நீரில் எழுதும் கையெழுத் தென்று” இசைக்கின்றார். நூலாலன்றி வாழ்க்கையனுபவத்தில் இனிது காண்பது பற்றி “உட் கண்டும்” என்று கூறுகிறார். உம்மை விகாரத்தால் தொக்கது. உடம்பின் இழிவை இத்தனைக் காட்சிகளாற் கண்டும், உயிரியல்பாதலின் “அதில் ஆசை கைவிடேன்” என்று விளம்புகிறார். “துன்பம் உழத்தொறும் காதற்றுயிர்” (குறள்) என்று திருவள்ளுவர் உரைப்பது காண்க. சிவஞானத்தாலன்றி இந்த ஆசை நீங்காது; அதனை அருள் செய்க எனற்கு, “என் செய்குவேன்” என இயம்புகிறார்.

     இதனால் இழிவுடைமையும் நிலையாமை யுடைமையும் உடற்கு இயல்பாதல் கண்டும் ஆசையறாமை கூறிக் குறிப்பாய்ச் சிவஞானம் அருள்க என விண்ணப்பித்தவாறு.

     (17)