170. குறிக்கொ ளன்பரைக் கூடுறாதவிவ்
வெறிக்கொள் நாயினை வேண்டி யையநீ
முறிக் கொள்வாய் கொலோ முனிகொள்வாய் கொலோ
நெறிக் கொள்வோர் புகழ் தணிகை நித்தனே.
உரை: நன்னெறி நிற்போர் புகழும் தணிகையில் மேவும் நித்தனாகிய பெருமானே, நீ குறிக் கொண்டு ஆதரிக்கும் மெய்யன்பரோடு கூடாத வெறிநாய் போன்ற என்னை விரும்பி, அடிமை கொள்வாயோ, வெறுத்துப் போக்குவாயோ, அறியேன், எ. று.
சிறப்பாக ஆதரிக்கப்படும் அன்பரைக் “குறிக்கொள் அன்பர்” என்று கூறுகின்றார். மெய்யன்பர்களைக் கூடுவது அன்பு மறவாமைப் பொருட்டு. கூடாமை பெருங் குற்றமாதலால் “முனிகொள்வாய் கொலோ” என்றும், நல்லறிவின்றிப் பிற நாய்களோடு கூடாது விலகி யோடும் வெறி நாயின் பண்புடைமை பற்றி இரக்கம் கொண்டு அன்புடன் திருத்தி யுய்தி பெறுவித்தற் பொருட்டு விரும்பி அடிமை கொள்வாயோ என்பார், “வெறிக்கொள் நாயினை வேண்டி ஐயநீ முறிக் கொள்வாய் கொலோ” என்றும் கூறுகின்றார். முறிகொளல்-அடிமை கொள்ளுதல். “குறி செய்து
கொண்டென்னை யாண்ட பிரான் குணம் பரவி முறி செய்து” (பூவல்லி) என்ற திருவாசகம் காண்க. வெறிக் கொள் நாய்-வெறி கொண்ட நாய்.
இதனால், வெறி நாய் போல விலகியோடும் என்னை விரும்பி ஆட்கொள்வாயோ, வெறுத்து நீக்குவாயோ அறியேன் என முறையிட்டவாறாம். (20)
|