1700. என்றும் இறவார் மிடற்றில்விடம்
இருக்க அமைத்தார் என்றாலும்
ஒன்று நிலையார் நிலையில்லா
தோடி உழல்வார் என்றாலும்
நன்று புரிவார் தருமன்உயிர்
நலிய உதைத்தார் என்றாலும்
கன்றுண் கரத்தாய் நான்அவர்மேல்
காதல் ஒழியேன் கனவினுமே.
உரை: வளையணிந்த கையையுடைய தோழி, எக்காலத்தும் இறவாதவராய், உண்ட நஞ்சினைக் கழுத்திலே தங்க வைத்துக் கொண்டவர் என இகழ்ந்தாலும், தனக்கென ஒன்றிலும் நிலையாமல் ஓரிடத்தும் நில்லாமல் ஓடித் திரிபவராயினும், நல்லதே செய்பவராய் நமனை உயிர் வருந்த உதைத்தா ரெனினும் அவர்மேற் கொண்ட காதலன்பைக் கனவினும் கைவிடேன். எ.று.
இறத்தல் பிறத்த லில்லாமையால் “என்றும் இறவார்” என்று கூறுகிறாள். எல்லா வுலகுயிர்களும் இறந்தாலும் தான் இறப்பது இல்லாதவர் எனினும் பொருந்தும். கழுத்தில் விடமிருக்க வைத்தவர் என்பது இகழ்ச்சிக் குறிப்பு. ஒன்றிலும் நிலையுற நில்லாமல் எல்லா வற்றிலும் கலந்து விளங்குபவனாதல்பற்றி, “ஒன்றும் நிலையார் நிலையில்லா தோடி யுழல்வார்” எனக் கூறுபவள் இகழ்ச்சியொலி தோன்ற இயம்புகிறாள். எவ்வுயிர்க்கும் நலமே புரியும் அருளாளனாகவும், மார்க்கண்டன் செய்த சிவவழிபாட்டுக்கு ஊறு நினைத்தமையால் நமனை வீழ்த்தினாராக, “தருமனுயிர் நலியவுதைத்தார்” எனச் சொல்லி எள்ளுகிறாள். என்றாலும், அவர்மேல் வைத்த காதலன்பைக் கையொழியேன் என்பது உட்கோள். இதனை “நான் அவர்மேற் காதல் கனவினும் ஒழியேன்” என்று கதவா நெறியில் உரைக்கின்றாள். (5)
|