1701.

     என்கண் அனையார் மலைமகளை
          இச்சித் தணைந்தார் ஆனாலும்
     வன்கண் அடையார் தீக்கண்ணால்
          மதனை எரித்தார் ஆனாலும்
     புன்கண் அறுப்பார் புன்னகையால்
          புரத்தை அழித்தார் ஆனாலும்
     கன்னல் மொழியாய் நான்அவர்மேல்
          காதல் ஒழியேன் கனவினுமே.

உரை:

      கரும்பு போன்ற இனிய சொற்களைப் பேசும் தோழி, எனக்குக் கண் போன்றவராயினும், மலைமகளான உமாதேவியை விரும்பித் தமது திருமேனியில் ஒரு கூறாகச் சேர்த்துக் கொண்டாரெனினும், வன்கண்மையே இல்லாதவராயினும், தனது நெருப்புக் கண்ணால் மன்மதனை எரித்தொழித்தாராயினும், துன்பம் துடைப்பவராய்த் தமது புன்சிரிப்பால் முப்புரத்தை அழித்தாரெனினும், நான் கனவின் கண்ணும் என் காதலன்பைக் கையகலேன். எ.று.

     கன்னல் - கரும்பு. இனிமைச் சுவைக்குக் கரும்பு உவமமாகிறது. எனக்குக் கண் போன்றவராயினும், உமாதேவியை விரும்பித் தமது திருமேனியில் ஒருகூறு தந்தாரென என்முன் நின்று பேசினாலும், நான் வருந்தேன் என்பாளாய், “மலைமகளை இச்சித்தணைத்தார் என்றாலும்” எனவுரைக்கின்றாள். எவ்வுயிர்பாலும் வன்கண்மை யில்லாதவரென்பர்; அதற்கு மாறாக மன்மதனிடத்து வன்கண்மை கொண்டு அவனை எரித்தாரெனப் பழிக்கினும் என்பாளாய், “வன்கண் அடையார் தீக்கண்ணால் மதனை எரித்தாரானாலும்” என மொழிகின்றாள். யாவர்க்கும் இன்னகை புரிந்து துன்பம் போக்குபவர் புன்னகை செய்து புரங்களை ஒழித்தாரென இகழ்கின்றாராயினும், நான் காதல் நீங்கேன் என்று வற்புறுத்தற்குப் “புன்னகையாற் புரத்தை யழித்தா ரானாலும்” எனப் புகல்கின்றாள்.

     (6)