1702. வாழ்வை அளிப்பார் மாடேறி
மகிழ்ந்து திரிவார் என்றாலும்
தாழ்வை மறுப்பார் பூதகணத்
தானை உடையார் என்றாலும்
ஊழ்வை அறுப்பார் பேய்க்கூட்டத்
தொக்க நடிப்பார் என்றாலும்
காழ்கொள் முலையாய் நான்அவர்மேல்
காதல் ஒழியேன் கனவினுமே.
உரை: காழ்த்த கொங்கைகளையுடைய தோழி, உலகுயிர்கட்கு வாழ்வளிப்பாராயினும், எருதின்மேல் இவர்ந்து மகிழ்ச்சியுடன் உலகெங்கும் செல்வார் எனினும், தாழ்ச்சியை வேண்டாராயினும், தாழ்ந்த பூத கணங்களாகிய படையை யுடையவராவர் எனினும், உருத்து வந்து உயிர்களைத் தாக்கும் ஊழ்வினையைப் போக்குவாராயினும், பேய்க் கூட்டத்துடன் கூடிச் சுடுகாட்டில் ஆடுவாரெனினும், நான் அவர் மேற் கொண்ட காதலைக் கனவினும் மறவேன். எ.று.
காழ்த்தல் - வன்மையுறுதல். உயிர் வகைகளின் மலப்பிணிப்பை ஒழிக்கும் பொருட்டு உலகைப் படைத்து உடல் கருவிகளைத் தந்து வாழச்செய்பவரென்பது பற்றி “வாழ்வை யளிப்பார்” என்று சொல்லுகிறாள். அவர்க்கு ஊர்தி எருதாகலின், அதன்மேல் ஏறி வருதலைச் செவிலி முதலானோர் இகழ்வது விளங்க, “மாடேறி மகிழ்ந்து திரிவார் என்றாலும்” எனவுரைக்கின்றாள். எத் திறத்தார்க்கும் சிறுமை யுண்டாவதை விரும்பாமல் உயர்தற்குரியன செய்தருளும் செயற்பெருமை தோன்ற, “தாழ்வை மறுப்பார்” என்பவள், பூத கணங்களைப் படையாக உடையராதலை எடுத்தோதிப் பிறர் இகழ்வதைக் குறிக்க, “பூத கணத்தானை யுடையாரென்றாலும்” எனப் புகல்கின்றாள். “பூதவினப் படை நின்றிசை பாடவும் ஆடுவர்” (தருமபுரம்) என ஞானசம்பந்தர் புகழ்வது காண்க. ஊழ்வினை - ஊழ் என வருதல்போல 'ஊழ்வு' என வரும்; அஃது ஊழ்த்தல் என்ற வினையடியாகத் தோன்றுதலால், ஊழ்வு என்று இசைக்கின்றார். ஊழ்: முதனிலைத் தொழிற் பெயர். தன்னைச் செய்த வுயிரை விடாது தொடரும் பெருவலி படைத்ததாயினும், எல்லாம் வல்ல இறைவனை யடரமுடியாத சிறுமை யுடையதாகலின், “ஊழ்வை யறுப்பார்” எனவுரைக்கின்றாள். திருவள்ளுவரும், “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு” என்பர். ஊழ்வினை உயிர்களால் செய்யப்படுவதாகலின், அதனை இறைவனாலும் போக்க முடியாதெனச் சிலர் கருதுவதும் உரைப்பதும் தவறு. உலையாது முயலும் நல்லோரால் ஊழ்வினை யுடைத் தெறியப்படும் எனத் திருவள்ளுவர், “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்” (குறள்) என்பது அறிதற் பாலது. செத்துப் பிறக்கின்ற தெய்வத்தால் ஊழ்வினையை வெல்லலாகா தாயினும், நன்முயற்சியாகிய வினை அதனை வென்று உரிய பயனைத் தந்துவிடும் என்பது கருத்து. ஊழை உப்பக்கம் காணும் உயர்வுடையராயினும், பேய்க்கூட்டம் ஆடும் ஆட்டத்துக்கும் ஒப்ப நின்று ஆடுவர் எனப் பிற மகளிர் கூறுவதை எடுத்தோதும் கருத்தால், “பேய்க்கூட்டத்து ஒக்க நடிப்பார் என்றாலும்” என இயம்புகின்றாள். இக் கூற்றுக்களை ஏற்று என் காதலன்பைக் கனவினும் விடேன் என்பது நங்கையின் காதற் சிறப்பு. (7)
|