1703.

     விமலை இடத்தார் இன்பதுன்பம்
          வேண்டா நலத்தார் ஆனாலும்
     அமலம் உடையார் தீவண்ணர்
          ஆமென் றுரைப்பார் ஆனாலும்
     நமலம் அறுப்பார் பித்தர்எனும்
          நாமம் உடையார் ஆனாலும்
     கமலை அனையாய் நான்அவர்மேல்
          காதல் ஒழியேன் கனவினுமே.

உரை:

      தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போன்ற என் தோழி, விமலையாகிய உமாதேவியை இடப்பாகத்தே யுடையவரான தியாகப்பெருமான் இன்பமும் துன்பமும் இல்லாத நலமுடையவர் என்று பிறர் கூறினாலும், மலமின்மையை இயல்பாக வுடையவராயினும் நெருப்புப் போன்ற நிறமுடைய திருமேனியுடையவரென்று உரைக்கப்பட்டாலும், நம்மைப்பற்றி வருத்தும் மலங்களைக் கெடுப்பாராகவும் பித்தன் என ஒரு பெயருமுடையரென மகளிர் சொன்னாலும், அவர்மேற் கொண்ட என் காதலன்பைக் கனவினும் கைந்நெகிழேன் காண். எ.று.

     தாமரையைக் கமலம் என்பது பற்றித் தாமரையில் மேவும் திருமகட்குக் 'கமலை' யென்பது பெயராயிற்று. தூய வுடம்பினளென நூலோர் கூறுவதால் உமாதேவியை விமலை என்று புகழ்கின்றாள். விமலை - மலமில்லாதவள். இடத்தார் - இடப்பாகத்தே யுடையவர். வேண்டுதல் வேண்டாமையில்லாத பெருமானாதலால் மகளிர் அவனை இன்பமும் துன்பமும் வேண்டாத நற்பண்புடையான் என்கின்றார்கள் என எடுத்துரைக்கின்றாள். இன்பம் வேண்டாதவனைக் காதலித்துப் பெறும் பயன் இல்லையென்பது அம் மகளிர் குறிப்பு. அமலம் - மலமின்மை. தேவி விமலையாயின் தேவனாகிய பெருமான் மலமுடையனாவனே என்ற அவாய் நிலையைப் போக்கற்கு “அமலமுடையார்” என்று பேசுகிறாள். அமலனாயினும் தீ நிறத்தன் என்று ஓர் இகழ்ச்சிக் குறிப்புப் புலப்பட மகளிர் “தீவண்ணராம் என்று உரைப்பார்” எனவுரைக்கின்றாள். “தீவண்ணர் திறமொருகாற் பேசாராகில்” (தணித்தாண்டகம்) என்று சான்றோர் ஓதுவர். “நல்லாரும் அவர் தீயரெனப்படும் சொல்லார்” (பாற்றுறை) என்று ஞானசம்பந்தர் பாடுவது காண்க. நம்மலம், எதுகை நோக்கி நமலமென வந்தது. “பித்தன் காண் தக்கன்றன் வேள்வியெல்லாம் பீடழியச் சாடி அருள்கள் செய்த முத்தன் காண்” (சிவபுரம்) என்று பெரியோர் கூறுதலால், “பித்தனெனும் நாமம் உடையார்” என மகளிர் உரைக்கின்றார்கள் என்றாலும், நான் காதலொழியேன் என்பது குறிப்பு.

     (8)