1704. மான்கொள் கரத்தார் தலைமாலை
மார்பில் அணிந்தார் என்றாலும்
ஆன்கொள் விடங்கர் சுடலைஎரி
அடலை விழைந்தார் என்றாலும்
வான்கொள் சடையார் வழுத்துமது
மத்தர் ஆனார் என்றாலும்
கான்கொள் குழலாய் நான்அவர்மேல்
காதல் ஒழியேன் கனவினுமே.
உரை: நறுமணம் கமழும் கூந்தலையுடையவளே, மானேந்தும் கையையுடைய பெருமானைத் தலைமாலையை மார்பில் அணிகின்றாரெனப் பிற மகளிர் பேசுவாராயினும், எருதெழுதிய கொடியைக் கொண்ட அழகராகிய அவரைச் சுடலையில் எரிகின்ற ஈமத்தீயிண் வெம்மையை விரும்புகிறார் என்பராயினும், வானக்கங்கையைத் தாங்கிய சடையை யுடைய அவரைத் தேன்பொருந்திய ஊமத்த மலர் சூடியவராதலை நினையாமல், மது மத்தர் என இகழ்வாராயினும், நான், அவர்மேற் கொண்ட காதலைக் கனவிலும் மறவேன். எ.று.
கான் - நறுமணம். கரம் - கை. தலைமாலை - செத்த தேவர்களின் தலைகளைக் கோத்த மாலை; தலைமாலையைத் தலையிலணியாது மார்பில் அணிகின்றாரென்றும், மகளிர் விரும்பும் அச்சம் தரும் தலைமாலை யணிகின்றாரென்றும் இகழும் குறிப்புப்படப் பேசுகின்றார்கள் என்பாளாய், “தலைமாலை மார்பிலணிந்தா ரானாலும்” என வுரைக்கின்றாள். ஆன் - எருது; ஈண்டு எருதெழுதிய கொடிமேற்று. ஊர்தியாகக் கொள்ளினும் பொருந்தும். விடங்கர் - அழகர். சுடலை - சுடுகாடு. அடலை - வெப்பம். ஈமத் தீ யொருபால் எரியச் சுடுகாட்டில் பேயும் பூதமும் சூழநின்று ஆடுவதுபற்றி, “சுடலை யெரி யடலை விழைந்தா” ரென மகளிர் இகழ்கின்றாரென்பாள், அதனை எடுத்தோதுகிறாள். வான், ஆகு பெயரால் அங்கிருந்து வந்த கங்கையைக் குறிப்பதாயிற்று. வழுத்துதல் - சொல்லுதல். மதுமத்தர் - தேன் பொருந்திய மத்த மாலை யணிந்தவர்; மதுவுண்டு களிப்பவர் என்றும் பொருள்கூற நிற்றலின், இகழ்ச்சிக் குறிப்பாயிற்று. யாவர் யாது கூறினும், நான் கனவினும் காதலொழியேன் என்று உரைக்கின்றாளாம். (9)
|