1705. போர்மால் விடையார் உலகமெல்லாம்
போக்குந் தொழிலர் ஆனாலும்
ஆர்வாழ் சடையார் தமைஅடைந்தோர்
ஆசை அழிப்பார் ஆனாலும்
தார்வாழ் புயத்தார் மாவிரதர்
தவஞா னியரே ஆனாலும்
கார்வாழ் குழலாய் நான்அவர்மேல்
காதல் ஒழியேன் கனவினுமே.
உரை: கரிய கூந்தலையுடைய தோழி, போர்வல்ல பெரிய எருதை ஊர்தியாகவுடைய சிவபெருமானை உலகெலாம் ஒடுக்கும் தொழிலைச் செய்வர் என்று மகளிர் உரைப்பாராயினும், ஆத்தி மாலை யணியும் சடையையுடையவர் என்று கூறினாலும், தமது திருவடியை யடைந்தவர்களின் ஆசையை அறுப்பவர் என அறிவித்தாலும், மாலை யணியும் தோளையுடைய அவரைப் பெரிய விரதங்களை யுடையரெனவும், தவஞானி யெனவும் உரைத்து என் கருத்தை மாற்ற மகளிர் முயன்றாலும், கனவினும் யான் அவர்மேற் கொண்ட காதலை மறவேன் காண். எ.று.
கருமை குழல், கார் குழல் என வந்தது. போர்க் காளை என்றற்குப் “போர் மால் விடை” எனப்படுகிறது. திருமாலாகிய விடையென்றும் உரைப்பர். காக்கும் தொழிலைப் புரியும் திருமாலாகிய விடையை யுடையராயினும், உலகங்களனைத்தையும் அழிக்கும் செயலினராதலை எடுத்தோதி மகளிர் இகழ்தாலும் என்பாள், “உலகமெல்லாம் போக்கும் தொழிலரானாலும்” என்று ஓதுகின்றாள். ஆர் - ஆத்தி மாலை. ஆசைகளால் துன்ப முண்டாதலின், தம்மை யடைந்தார் துன்ப முறாமைப் பொருட்டு ஆசை யறுத்தருளும் அருட்செயலைப் பழிக்கும் கருத்தால, “தமை யடைந்தோ ராசை யழிப்பா ரானாலும்” எனக் கூறுகின்றாள். தார் - மாலை; ஈண்டு அது கொன்றை மாலை யென அறிக. விரதர் - உண்ணாமை கொல்லாமை போன்ற விரதங்களை யுடையவர். அகச் சமய மாறில் ஒன்றாகிய மாவிரதத்தைச் சார்ந்தவர் என்பது தோன்ற, “மாவிரதர்” என்று கூறுகின்றார் என்பதுமாம். விரதிகளும் தவஞானிகளும் மகளிராசையுடைய ரல்லாராதலின் நின் காதல் பயன்படாதாம் என்ற கருத்தமைய, “மாவிரதர் தவஞானியரே ஆனாலும்” என மொழிகின்றாள். இன்னோ ரன்ன வுரைகளால் என் காதல் கனவினும் நீங்காதென்பது உட்கோள். (10)
|