1707. உடையார் உலகிற் காசென்பார்க்
கொன்றும் உதவார் ஆனாலும்
அடையார் கரியார் வேண்டார்க்கே
அருள்வார் வலிய ஆனாலும்
படையார் கரத்தர் பழிக்கஞ்சாப்
பாசு பதரே ஆனாலும்
கடையா அமுதே நான்அவர்மேல்
காதல் ஒழியேன் கனவினுமே.
உரை: கடலைக் கடையா தெடுத்த அமுது போன்றவளே, சிவபெருமான் எல்லாம் உடையவராயினும், இவ்வுலகிற்கே பொருட்குப் பற்றுக் கோடாவோம் எனச் செருக்குவார்க்கு ஒன்றும் உதவமாட்டார் எனப் புகழ்வார்போற் கூறினாலும், மாறுற்றுத் தன்னை யடையாதார்க்குப் பெறலரியராயினும், அம்மாற்றார்க்குத் தாமே வலியச் சென்று வேண்டியன அளித்து ஆதரிப்பரென்று கூறினாலும், படைகளை யேந்தும் கையை யுடையரான தியாகப் பெருமான் பழிக்கஞ்சாத பாசுபதம் என்ற படையை யுடையவர் என வுரைத்தாலும், நான் அவர்மேற் கொண்ட காதலைக் கையொழியேன். எ.று.
கடல் கடைந்து பெற்றது தேவர் பெற்ற அமுதமாகலின், தோழியை அமுதெனச் சிறப்பிக்கின்றவள், கடலமுதின் வேறுபடுத்தற்குக் “கடையா அமுதே” என்று கூறுகிறாள். எல்லாம் உடையராகியும், பெருஞ் செல்வத்தால் உலகிற்கு யாமே பற்றுக் கோடாவேம் எனச் செருக்கி நிற்பார்க்குத் திருவருளுணர் வில்லாமையால் ஒன்றும் உதவுவ திலர் என்பது பற்றி, “உலகிற்கு ஆசு என்பார்க்கு ஒன்றும் உதவார்” எனப் பிறரெல்லாம் பேசுகின்றார்கள் என வுரைக்கின்றாள். ஆசு - பற்றுக் கோடு. “ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ” (புறம். 235) எனச் சான்றோர் வழங்குவது காண்க. அடையார் - அன்பால் திருவடி நினைந்து சேராதார். அன்புற்று வேண்டாதாராயினும், அன்பும் தெளிவும் உண்டாதற் பொருட்டுத் தாமே வலியச் சென்று உதவுவது சிவன் செயலாதலால், “வேண்டார்க்கே வலிய அருள்வாரானாலும்” என மொழிகின்றாள். படை - சூலப்படை முதலியன. போரில் மாற்றாரைக் கொல்வது பாசுபதம் என்னும் படை. அருளுருவாகிய சிவபெருமான் படை யேந்துவதும் அருச்சுனன் முதலிய போர் மறவர்க்குப் பாசுபதம் தருவதும் பழியாதலால், “பழிக் கஞ்சாப் பாசுபதர்” என மகளிர் கூறுகின்றார்கள்; இதனைப் பெருந்திணை நங்கை கொண்டெடுத்து மொழிகின்றமையால் “பழிக் கஞ்சாப் பாசுபதரானாலும்” என்று உரைக்கின்றாள். இவ்வாற்றால் கூறப்படுவன கேட்டுக் “கனவினும் காதலொழியேன்” என்பது நங்கையின் கதவா மாண்பு. (12)
|