94. ஆற்றா
விரகம்
தோழியொடு
கூறல்
திருவொற்றியூர்
அஃதாவது
பொறுக்க மாட்டாத அளவிற் பெருகிய காம நோயால் பெருந்திணை நங்கை பேதுறவு கொண்டு தானே
தலைவன்பாற் சென்று கூடக் கருதுவதும், தன்னை அவன் மறுத்தால் என் செய்வதென எண்ணி ஏக்கறுவதும்,
மான வுணர்வுற்றுப் பிற மகளிர் கண்டால் எள்ளி நகையாடுவரென வருந்துவதும், தன் தோழிபாற்
சொல்லி அயா வுயிர்ப்பதாம். நங்கை எய்தி வருந்தும்காமவேட்கை உலகியலில் வழங்கும் விரக
வேட்கை யன்று. விரகம், வேறு; உடம்பு படைக்கும் குறிப்புடையது; மகப் பேற்றுக்குரிய உடலுணர்வு.
நங்கையின் வேட்கை சிவன்பாற் பெறலாகும் ஞான வின்பப் பேறு பெறும் குறிப்பினது. இவ்வேறுபாடு
நோக்காமல், இதற்கு ஆற்றாவிரகம் எனப் பெயரிட்டுள்ளனர். இதன்கண் நங்கை சிவபிரான் தன்னை
ஏலா தொழியின் உண்டாகும் ஏதங்களை எண்ணி எதிர்பெய்து தோழியொடு கூறிப் பரிவது
பாட்டுத்தோறும் வருவது காண்க.
அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 1708. ஓணம் உடையான் தொழுதேத்தும்
ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால்
மாண வலியச் சென்றென்னை
மருவி அனைவீர் என்றேநான்
நாணம் விடுத்து நவின்றாலும்
நாமார் நீயார் என்பாரேல்
ஏண விழியாய் என்செய்வேன்
என்னை மடவார் இகழாரோ.
உரை: மான்போலும் கண்களையுடைய தோழி, திருவோண நாளை யுடைய திருமால் தொழுது பரவும் திருவொற்றியூரில் எழுந்தருளும் உத்தமராகிய தியாகப் பெருமானிடம் மிகவும் வலியச்சென்று என்னைச் சேர்ந்து கூடுவீராக என நானே நாணத்தைத் துறந்து வாயாற் கேட்டால், அவர் என்னை நோக்கி உன்னைக் கூடுதற்கு நான் யார்? கூட்டம் வேண்டும் நீ யாவள்? என்று சொல்லுவாராயின் நான் யாது செய்வேன்; ஏனை இளமகளிர் என்னை இகழமாட்டார்களா? கூறுக. எ.று.
ஏணம் - மான். மகளிர் கண்கட்கு மான் விழியை உவமிப்பது மரபு. “மானினேர் விழிமாதராய் வழுதிக்கு மாபெருந் தேவி கேள்” (ஆலவாய்) என ஞானசம்பந்தர் பாடுவது காண்க. திருமாலாகிய கண்ணபிரான் பிறந்தது திருவோண நாளாதலின் “ஓண முடையான்” எனக் கூறுகின்றாள். “திருவோணத்தான் உலகாளும் என்பார்களே” (2 : 3) எனப் பெரியாழ்வார் உரைப்பர். மாணல் - மிகுதல். “மலையினும் மாணப் பெரிது” (குறள். 124) எனச் சான்றோர் வழங்குதலறிக. மகளிர் நாண் துறவா மாண்புடையராகலின், விரும்பும் காதலர்பால் வலியச் செல்லுதல் இல்லை. “உடம்பும் உயிரும் வாடியக்காலும், என்னுற்றன கொல் இவையெனி னல்லது கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை” (பொருள்) என்பது தொல்காப்பியம்; இந்த அருமை விளங்கவே, “நாணம் விடுத்து நவின்றாலும்” என வுரைக்கின்றாள். மறுத்தால் என்செய்வது என்ற அச்சம் தோன்றி வருத்துகின்றமை புலப்பட, “நாமார் நீ யார் என்பாரேல் என்செய்வேன்” என்று புலம்புகிறாள். வலியச் சேறலும் மறுப்புண்டலும் பிற மகளிர் அறியின் இகழ்வாம் என்பாள், “என்னை மடவார் இகழாரோ” என வருந்துகிறாள். இது ஆற்றாமையால் வழக்கினுள் வரும் அறக்கழிவாம் என்க. (1)
|