1709.

     காதம் மணக்குங் கடிமலர்ப்பூங்
          காவார் ஒற்றிக் கண்நுதலார்
     போதம் மணக்கும் புனிதர்அவர்
          பொன்னம் புயத்தைப் புணரேனேல்
     சீதம் மணங்குங் குழலாய்என்
          சிந்தை மயங்கித் தியங்குமடி
     ஏதம் மணக்கும் என்செய்வேன்
          என்னை மடவார் இகழாரோ.

உரை:

      குளிர்ந்த மணங் கமழும் கூந்தலையுடைய என் தோழி, காத தூரம் மணம் பரப்பும் நறிய மலர்களையுடைய பூங்காக்கள் பொருந்திய திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் கண்ணுதற் கடவுளாகிய பெருமானும், ஞான மணங் கமழும் தூயவருமான தியாகப் பெருமானுடைய அழகிய தோள்களைச் சேராதொழிவேனாகில், என் மனம் மயக்கமுற்றுக் கலக்க மெய்தும்; என் சொல் செயல்களிற் குற்றமும் உண்டாகும்; என்னைக் காணும் பிற மகளிரும் என்னை இகழ்வார்கள்; இதற்கு என் செய்வேன்? எ.று.

     புதுப் பூக்களை யணிவதால் கூந்தல் குளிர்ச்சியும் நன்மணமும் பெறுவதுபற்றித் தோழியைச் “சீதம் மணக்கும் குழலார்” என்று சிறப்பிக்கின்றாள். பூங்காக்களில் மிகவாய் மலர்ந்த பூக்களின் நறுமணம் கடற் காற்றால் நெடுந்தூரம் பரப்பப்படுதல் விளங்கக் “காதம் மணக்கும் கடி மலர்ப் பூங்கா” எனப் புகழ்கின்றாள். கண்ணுதலார் - நெற்றியிற் கண்ணுடைய சிவபெருமான். ஞானமே உருவாக அமைந்த தூயவர் என்றற்குப் “போதம் மணக்கும் புனிதர்” என்று கூறுகின்றாள். பொன்னம் புயம் - அழகிய தோள்; பொன்னிறங் கொண்ட தோள் எனினுமாம். புணராவிடின் காம நோய் மீதூர்ந்து சிந்தையை மயக்கிச் செம்மை நெறி பிறழச் செய்தற்கு அஞ்சுகின்றமை தோன்ற, “என் சிந்தை மயங்கித் தியங்கும்” என்று கூறுகின்றாள். இம்மயக்கமும் தியக்கமும் பல்வகைக் குற்றங்களை விளைவிப்பதுபற்றி “ஏதம் மணக்கும்” என்றும், ஏனை இளமகளிர் காணின் தன்னைத் தூற்றவரென நினைக்கின்றமை புலப்பட, “என்னை மடவார் இகழாரோ” என்றும், இவ்வாற்றால் உளதாகும் கையறவை, “என் செய்வேன்” என்றும் இயம்புகின்றாள்.

     (2)