1710. பண்ணார் மொழியார் உருக்காட்டும்
பணைசூழ் ஒற்றிப் பதியினர்என்
கண்ணார் மணிபோன் றென்உயிரில்
கலந்து வாழும் கள்வர்அவர்
நண்ணார் இன்னும் திருஅனையாய்
நான்சென் றிடினும் நலம்அருள
எண்ணார் ஆயின் என்செய்வேன்
என்னை மடவார் இகழாரோ.
உரை: திருமகள் போன்ற என் தோழியே! பண்ணிசை போல் சொல் வழங்கும் மகளிரின் உருவை நினைப்பிக்கும் மருதவயல் சூழ்ந்த திருவொற்றியூரினை யுடையவரும், என் கண்ணிற் பொருந்திய மணி போன்று என் உயிர்க்குயிராய்க் கலந்து நிற்கும் கள்வருமான தியாகப் பெருமான், இன்னும் என்பால் வந்திலர்; ஆதலால், நான் அவரிடம் நாடிச் செல்வேனாயின், அவர் தாமும் எனக்கு நலஞ் செய்யக் கருதாராயின், யான் யாது செய்வேன்? ஏனை மகளிர் அறிந்தால் என்னை யெள்ளி இகழ்வார் காண்! எ.று.
நன்மகளிர்க்குத் திருமகளை உவமம் செய்தல் மரபாதலின், “திருவனையாய்” எனத் தோழியைப் பாராட்டுகின்றாள். இளமகளிரின் மெல்லிய சொல்லோசை, இனிய இசைபோறலின், “பண்ணார் மொழியார்” எனப் பகர்கின்றாள். வயல்களில் மலரும் பல்வகைப் பூக்கள் மகளிரின் பல்வேறு உறுப்புக்களைக் காட்டி அவர்களை நினைப்பித்தலால் “பண்ணார் மொழியார் உருக்காட்டும் பணை” எனப் பகர்கின்றார். பணை - மருதவயல். கண்ணார் மணி - கண்ணின் மணி. உயிர்க்குயிராய்க் கலந்து ஒன்றி, அவ்வுயிர்தானும் காணாவகை மறைந்து நிற்பதுபற்றிச் சிவபெருமானை, “என்னுயிரிற் கலந்து வாழும் கள்வர்” என்று உரைக்கின்றாள். வருவர்என எதிர்நோக்கி வேட்கை நோய் மிகுவது விளங்க, “அவர் இன்னும் நண்ணார்” என நவில்கின்றாள். வாராமை கண்டு காமநோய் முறுகுதலால், நானே அவரிருக்குமிடம் நாடி யடையக் கருதுகிறேனாயினும், நாண்வரை யிறந்த எனது செயல் நோக்கி, எனக்கு நலம் நல்க விழையாராயின் என் செய்வது என வருந்துமாறு புலப்பட, “நான் சென்றிடினும் நலமருள எண்ணாராயின் என்செய்வேன்” என இசைக்கின்றாள். இது நாணுவரை யிறந்தால் விளைவது நினைந்து வருந்துவதாம். (3)
|