1711. ஊர்என் றுடையீர் ஒற்றிதனை
உலக முடையீர் என்னைஅணை
வீர்என் றவர்முன் பலர்அறிய
வெட்கம் விடுத்துக் கேட்டாலும்
சேர்என் றுரைத்தால் அன்றிஅவர்
சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ
யார்என் றுரைத்தால் என்செய்வேன்
என்னை மடவார் இகழாரோ.
உரை: தியாகப் பெருமான் திருமுன் சென்று, 'உலகெலாம் உடைய தலைவராகிய நீர், இத்திருவொற்றியூரையும் ஊராக உடையவராதலின், என்னையும் சேரக்கூடுக' என்று அங்குள்ளார் பலருமறிய முன்னின்று நாணந்துறந்து கேட்டபோது, “நன்று என்னைச் சேருக” என்று அவர் தாமே வாய்திறந்து உரைத்தாலன்றி, மாறாக என்னை “நீ யார்?” என்று அயன்மைபடக் கேட்பாராயின், என்னைப் பலரும் புறக்கணிப்பர்; கேள்வியுறும் ஏனை மகளிரும் என்னை யெள்ளி இகழ்வர் காண்! எ.று.
உலகெலா முடையவராகவும், திருவொற்றியூரை ஊராகக் கொண்டீர் என்பது உலகமக்கள் அனைவரையும் ஒக்க நோக்கும் ஒருமைத்தன்மை யுடையீராயினும், என்னை உரிமை மனைவியாகக் கொண்டருள வேண்டுமெனும் குறிப்பேதுக் காட்டி, “என்னை யணைவீர்” என்றதாம். “தன்னுரு வேட்கை கிழவன்முன் கிளத்தல், எண்ணங்காலைக் கிழத்திக் கில்லை” (களவு. 27) என நூல்கள் கூறினும், பெருந்திணைக்கண் அவ்விதி செல்லாமை நோக்கி, “அவர்முன் பலரறிய வேட்கை விடுத்துக் கேட்டாலும்” என விளம்புகின்றாள். சேர்தலும் விடுத்தலும் அவன் செயலாதலின், “சேர் என்றுரைத்தாலன்றி அவர் சிரித்துத் திருவாய் மலர்ந்து எனை நீ யார் என்றுரைத்தால் என்செய்வேன்” என இசைக்கின்றாள். “சேர்வேன்” என்னாது, 'சேர்' என்பது தானே வலியச் சென்றமைபற்றி, சிவனது செம்மைத் தன்மையை நினைவிற்கொண்டு, அவர் மறுக்கும் சொல்நெறியை எண்ணிச் “சிரித்துத் திருவாய் மலர்ந்து நீ யார் என்றுரைத்தால்” எனத் தெரிவிக்கின்றாள். வலியச் சென்றவழி ஏலாது மறுத்தால் என் செய்வதென்னும் கையறவை எதிர்பெய்து பரிந்தது. (4)
|