1712. சோமன் நிலவுந் தூய்ச்சடையார்
சொல்லிற் கலந்த சுவையானார்
சேமம் நிலவுந் திருஒற்றித்
தேவர் இன்னும் சேர்ந்திலர்நான்
தாமம் அருள்வீர் என்கினும்இத்
தருணத் திசையா தென்பாரேல்
ஏம முலையாய் என்செய்வேன்
என்னை மடவார் இகழாரோ.
உரை: பொன்னிறக் கொங்கைகளையுடைய தோழி, பிறைத் திங்கள் தங்குகிற தூய சடையை யுடையவரும், சொற்சுவை போல்பவரும், நன்மை பொருந்திய திருவொற்றியூரில் எழுந்தருளும் தேவ தேவருமாகிய தியாகப்பெருமான், இன்னும் என்னைச் சேர்ந்தாரில்லை; மார்பின் மாலையைத் தந்தருள்க, என்று இரந்து கேட்பினும், இச்சமயத்து இயலாது என உரைப்பாரேல், யான் என்செய்வேன்? இதனையறியும் இன மடவார் என்னை யெள்ளி இகழாரோ! எ.று.
எப்போதும் துகிலால் மூடப்பட்டிருத்தலின் மகளிர் இளங்கொங்கை பொன்னிறம் பூத்துப் பொலிவதுபற்றித் தோழியை, “ஏம முலையாய்” எனக் குறிக்கின்றாள். ஏமம் - பொன். சோமன் - சந்திரன்; ஈண்டு இளம்பிறை மேற்று. தூய மின்போல் ஒளிர்வதுபற்றி, இறைவன் சடையைத் “தூய்ச்சடை” எனப் புகல்கின்றார். சொல்லின் சுவை, பிரிவறக் கலந்திருத்தலின், எவ்வுயிர்க் கண்ணும் கலந்திருக்கும் இறைவனைச் “சொல்லிற் கலந்த சுவையானார்” என்று சொல்லுகின்றாள். சேமம் - நன்மை. பன்னாள் எதிர்நோக்கி ஏங்கியிருத்தல் தோன்ற, “இன்னும் சேர்ந்திலர்” எனச் செப்புகின்றாள். நேரிற் சென்று, தியாகப் பெருமானது மார்பின் மாலையைப் பெற்று, அணிந்து வேட்கை வெம்மை தணியலாம் என நினைக்கின்றாளாதலின், “நான் தாமம் அருள்வீர் என்கினும்” என எண்ணுகிறவள், வரும் ஏதம் நினைந்து திகைக்கின்றாளாதலின், “இத்தருணத்து இசையாதென்பாரேல் என் செய்வேன்” எனக் கையறுகின்றாள். தன் செயல் புறத்தாரக்குத் தெரியின் எய்தும் எள்ளற்பாட்டுக்கு அஞ்சி, “என்னை மடவார் இகழாரோ” என இயம்பியவாறாம். (5)
|