|
1713. வில்லை மலையாய்க் கைக்கொண்டார்
விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்சூழ்
தில்லை நகரார் ஒற்றியுளார்
சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால்
ஒல்லை அடைந்து நின்றாலும்
உன்னை அணைதல் ஒருபோதும்
இல்லை எனிலோ என்செய்கேன்
என்னை மடவார் இகழாரோ.
உரை: தோழி! மேருமலையை வில்லாகக் கொண்டவரும், விடம் பொருந்திய கழுத்தை யுடையவரும், விரிந்த சோலை சூழ்ந்த தில்லை நகரையுடையவரும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவருமான சிவபெருமான், இன்றுவரை என்னை யணைந்தார் இல்லை; அவரிடம் நான் விரைந்து சென்று திருமுன்பு நின்றாலும், உன்னை ஒருகாலும் சேர்வதில்லை என்று சொல்வாராயின் நான் என்ன செய்வேன்? ஏனை இளமகளிரினர் காணின் என்னை யெள்ளி இகழ்வாரன்றோ? எ.று.
வில்லை மலையாய்க் கைக்கொண்டார் எனப் பிரித்து இயையும். மலை: ஈண்டு மேருவின் மேற்று. வளமிக்க நகராதலின், “விரிபொழில்சூழ் தில்லை” எனச் சிறப்பிக்கின்றார். ஒல்லை : விரைவு குறித்தது. “உன்னை யணைதல் ஒருபோதும் இல்லையெனில்” என்பது எய்தாதது எதிர்பெய்து பரிதல். (6)
|