1714. திருந்தால் அமர்ந்தார் திருப்புலியூர்ச்
சிற்றம் பலத்தில் திருநடம்செய்
மருந்தார் ஒற்றி வாணர்இன்னும்
வந்தார் அல்லர் நான்போய்என்
அருந்தாழ் வகல அருள்வீரென்
றாலும் ஒன்றும் அறியார்போல்
இருந்தால் அம்மா என்செய்வேன்
என்னை மடவார் இகழாரோ.
உரை: அம்மா தோழி, திருந்திய ஆலமர நீழற்கண் இருந்தருளியவரும், திருப்புலியூரிலுள்ள சிற்றம்பலத்தில் திருக்கூத்தியற்றும் மருந்தாகுபவரும், திருவொற்றியூர் வாழ்நருமாகிய சிவபெருமான் இதுவரை என்னிடம் வந்தாரில்லை; நானே சென்று எனது சிறுமை நீங்கத் திருவருள் செய்க என்று கேட்டால் ஒன்றும் அறியாதவர்போல் இருந்தொழிவாராயின் நான் என்ன செய்வேன்; இதனையறிந்தால் ஏனை யிளமகளிர் என்னை எள்ளி இகழ்வாரன்றோ. எ.று.
அன்று சனகர் முதலிய நால்வர்க்கு அறம் சொன்னபோது எழுந்தருளிய கல்லால மரத்தைத் “திருந்து ஆல்” என்று சிறப்பித்து, அதன் கீழ் இருந்த நலத்தை “அமர்ந்தார்” என உரைக்கின்றாள். திருப்புலியூர்-பெரும்பற்றப் புலியூர்; சிதம்பரத்தில கூத்தப் பிரான் திருக்கோயில் மூலட்டானம்; இது புலியூரெனவும் வழங்குதலால், திருப்புலியூர் என்கின்றார். இங்கே கூத்தப்பிரான் காட்சி தரும் பொன்னம்பலம் சிற்றம்பலம் எனப்படுகிறது. திருநடம் புரியும் கூத்தப்பெருமான் பிறவி நோய்க்கு மருந்தாவதுபற்றி, “மருந்தார்” என்று கூறுகிறாள். “வலஞ்சுழி மருவிய மருந்து” (வலஞ்) என ஞானசம்பந்தர் போற்றுகிறார். வாழ்நர்: வாணரென மருவிற்று. பன்னாள் எதிர்நோக்கி யிருந்தாளாகலின், “இன்னும் வந்தாரல்லர்” என்று வருந்துகின்றாள். தியாகப்பெருமான் போந்து கூட்டம் நல்காமையால் உளதாகிய மெலிவினை, “அருந்தாழ்வு” எனக் குறிக்கின்றாள்; பிரிதொன்றால் போக்கரிதாதலால் “அருந்தாழ்வு” என வோதுகிறாள். தாழ்வகல வேண்டி நினைப்பவள், மறுத்தால் என் செய்வதென்ற எண்ண மேலிட்டு” “ஒன்றும் அறியார் போல் இருந்தால் என்செய்வேன்” என நினைந்து மொழிந்து இனைகின்றாள். பிறரறியின் எய்தும் எள்ளற் பாடு எண்ணி, “என்னை மடவார் இகழாரோ” என வருந்துகிறாள். (7)
|