1715.

     அசையா தமர்ந்தும் அண்டமெலாம்
          அசையப் புலியூர் அம்பலத்தே
     நசையா நடிக்கும் நாதர்ஒற்றி
          நாட்டார் இன்னும் நன்ணிலர்நான்
     இசையால் சென்றிங் கென்னைஅணை
          வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும்
     இசையார் ஆகில் என்செய்கேன்
          என்னை மடவார் இகழாரோ.

உரை:

      தான் அசையா திருந்தே அண்டங்களெல்லாம் அசைந்தாடத் திருப்புலியூர்ச் சிற்றம்பலத்தில் விரும்பி நின்று நடிக்கும் நாயகரும், திருவொற்றியூர் நாட்டையுடையவருமான தியாகப்பெருமான் இன்னமும் என்பால் வந்திலர்; அதனால், நான் இசைவுடன் சென்று இங்கே என்னைச் சேர்ந்தருள்க என்று வேண்டுவேனாக, அதற்கும் உடன்படாராயின் என்ன செய்வேன்; என்னை ஏனை மடவார்கள் எள்ளி நகை செய்வரன்றோ. எ.று.

     அண்டங்கள் அனைத்தினும் காணப்படும் இயக்கத்துக்கெல்லாம் மூல காரணன் என்பது விளங்க, “அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூரம்பலத்தே நசையா நடிக்கும் நாதர்” என நவில்கின்றார். “அவனன்றி ஓரணுவும் அசையாது” என்பது உலகுரை. புலியூர் - பெரும்பற்றப் புலியூர். ஒற்றியூரும் அதனைச் சூழவுள்ள நாடும் ஒற்றி நாடு என அறிக. அந்நாட்டை உடைமைபற்றி, “ஒற்றி நாட்டார்” என உரைக்கின்றார். நண்ணுதல் - வந்து சேர்தல். இசையாற் சேறல் பெண்மை தடுத்தலின், ஒருவாறு இசைவித்துக்கொண்டு, துணிவுடன் செல்லுதல். இசைவு - விகுதி குன்றி இசையென வந்துளது. உரைப்பேனெனில், உரைக்க மாட்டாத ஒன்றினை உரைத்தால் என்பது தோன்ற நிற்கிறது. இசைதல் - உடன்படல். “இசையாராகில்” என்பது, பிறராயின் இசையா தொழியார், அவர் அன்னரல்லர் என்பதுபட நின்றது. அவரது இசையாமை கேட்டு வருவது எத்துணை இகழ்ச்சிக் கிடமாம் என்பாள், “என்னை மடவார் இகழாரோ” என இசைக்கின்றாள்.

     (8)