1716.

     மாற்கா தலிக்கும் மலர்அடியார்
          மாசற் றிலங்கும் மணிஅனையார்
     சேற்கா தலிக்கும் வயல்வளஞ்சூழ்
          திருவாழ் ஒற்றித் தேவர்அவர்
     பாற்கா தலித்துச் சென்றாலும்
          பாவி அடிநீ யான்அணைதற்
     கேற்காய் என்றால் என்செய்வேன்
          என்னை மடவார் இகழாரோ.

உரை:

திருமால் அன்பு செய்து போற்றும் மலர் போன்ற திருவடியை யுடையவரும், குற்றமேதுமின்றி ஒளிரும் மாணிக்க மணி போன்றவரும், சேல் மீன்கள் விரும்பி வாழும் நன்செய் வயல் வளம் சூழவுள்ள திருமகள் வீற்றிருக்கும் திருவொற்றியூர்த் தேவ தேவருமான தியாகப் பெருமான்பால் யான் மெய்க் காதலுற்றுச் சென்றேனாயினும், அடி நீ ஒரு பாவி; யான் வந்து கூடுதற்குப் பொருந்தாய் என்று சொன்னால் யான் என்ன செய்வேன்; என்னை ஏனைப் பெண்கள் இகழ்ந்து ஏசுவரன்றோ. எ.று.

     மால் காதலிக்கும் எனற்பாலது செய்யுளாகலின் “மாற் காதலிக்கும்” என வந்தது. மலர் அடியார் - தாமரை மலர் போன்ற திருவடியை யுடையார். மாசு - மணிகட்குக் கூறப்படும் குற்றங்கள். “மாணிக்கத்தியல் வகுக்குங்காலைச், சமனொளி சூழ்ந்த ஒரு நான்கிடமும், நால்வகை வருணமும் நவின்ற இப்பெயரும், பன்னிரு குணமும் பதினறு குற்றமும் இருபத் தெண்வகை யிலங்கிய நிறமும், மருவிய விலையும் பத்தி பாய்தலும், இவையென மொழிப இயல்புணர்ந் தோரே” (சிலப். 14 : 186-7 அடிநல். மேற்கொள்) என்பதால், மாணிக்க மணிக்குக் குற்றம் பதினாறு வகை யென்று தெரிகிறது. சேல் காதலிக்கும் என்பது மாற் காதலிக்கும் என்றாற் போல எதுகைபற்றி வந்த செய்யுள் விகாரம். என்னைச் சூழ்ந்துள்ள தீ வினை அருவமாயினும் பாவ வடிவில் தியாகப் பெருமான் கண்ணிற்குத் தோன்ற, “பாவியடி நீ” எனவும், “யான் அணைதற்கேற்காய்” எனவும் கூறி மறுத்தால் “என்செய்வேன்” என்று வருந்துகிறாள். வினை அருவ மென்பதை, “காவாய் அருவாய வல்வினை நோய் அடையா வண்ணம்” (ஆவடு) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க.

     (9)