172.

    உள்ள நெக்குவிட் டுருகு மன்பர்தம்
    நள்ளகத்தினி னடிக்கும் சோதியே
    தள்ளருந் திறல் தணிகை யானந்த
    வெள்ளமே மனம் விள்ளச் செய்வையே.

உரை:

     விலக்குதற்கரிய அருள்வலி பொருந்திய திருத் தணிகையில் எழுந்தருளும் ஆனந்த வெள்ளமே, மனம் குழைந்து நீராய் உருகும் மெய்யன்பர் உள்ளத்துள் திருக்கூத்தாடும் அருட் சோதியே, என் மனத்தைத் தடுமாறும் தன்மையை விட்டொழிக்கச் செய்தருள்க, எ. று.

     தள்ளருந் திறள் ஆனந்த வெள்ளம் என இயையும். வெள்ளம்- நீர்ப்பெருக்கு. அணைகளாலும் கரைகளாலும் தடுக்கப்படும் உலகியல் நீர் வெள்ளம் போல் தடுக்கப்படாத பேராற்றலுடையது இறைவன் அருளும் இன்ப வெள்ளம் என்று சிறப்பித்தற்குத் “தள்ளருந்திறல் ஆனந்த வெள்ளமே” என்று இசைக்கின்றார். அன்பால் உருகும் மெய்யடியார் உள்ளத்தில் ஞானப் பேரொளி செய்தலால், “உள்ளம் நெக்கு விட்டுருகும் அன்பர்தம் நள்ளகத்தினில் நடிக்கும் சோதியே” என வுரைக்கின்றார். “உருகுவார் உள்ளத்து ஒண்சுடர் தனக்கென்றும் அன்பராம் அடியார்கள் பருகும் ஆரமுது” (கோட்டூர்) என ஞானசம்பந்தர் நவில்வது காண்க. நெக்கு விடுதல்-பிளத்தல்; ஈண்டுக் குழைதல் மேற்று, குழைந்தல்லது உருகுதலின்மையின். உள்ளத்தின் உள்ளிடம், “நள்ளகம்” எனப்படுகிறது. நடித்தல்-ஒளிர்தல். கட்புலனாகாத காற்றலையாள் ஒளி அசைந்து விளங்குதல்; அதனால் “நடிக்கும் சோதியே” என்று புகல்கின்றார். முன்னைத் திருப்பாட்டில் மனத்தின் மாறும் தன்மையை எடுத்துரைத்தமையின், அத்தன்மையைப் போக்க வேண்டுமென வேண்டுகின்றாராதலின், “மனம் விள்ளச் செய்வையே” என்று கூறுகின்றார். கண் முதலிய கருவிகட்கு மனம் அகப்படாமையால், விள்ளல் வேண்டி இறைவன்பால் முறையிடுகின்றார். ஒன்றாவிடத்துப் பொன்றா இன்பம் எய்தலில்லை யெனப் பெரியோர் உரைப்பது அறிக.

     இதனால் மனத்தின் கணந்தோறும் மாறும் தன்மையைப் போக்கியருள்க என்று வேண்டிக் கொண்டவாறாம்.

     (22)