1720. தாயாய் அளிக்குந் திருஒற்றித்
தலத்தார் தமது பவனிதனை
மாயா நலத்தில் காணவந்தால்
மருவும் நமது மனங்கவர்ந்து
பாயா விரைவில் நமைத்திரும்பிப்
பாரா தோடு கின்றார்நாம்
ஓயா தோடி னாலும்அவர்
ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
உரை: உலகுயிர்கட்குத் தாயாய் அருள் புரியும் திருவொற்றியூராகிய தலத்தின்கண் எழுந்தருளுகிற தியாகப் பெருமான் திருவுலா வரவைக் குறையாத பொலிவுடன் கண்டு மகிழ வந்தேமாக, நம்முடைய மனத்தைக் கவர்ந்துகொண்டு பாய்ந்தோடும் வேகத்தில் நம்மைத் திரும்பியும் பாராமல் ஓடுகின்றார்; நாமும் தொடர்ந்து இளைக்காமல் ஓடினாலும் அவரது ஓட்டம் பிடிக்க வொண்ணததாய் இருக்கிறது, காண். எ.று.
தாய்மைப் பண்பாற் சிறந்தமை விளங்கத் தியாகப் பெருமானை, “தாயாய் அளிக்கும் திருவொற்றித் தலத்தார்” என்று போற்றுகின்றாள். “தாயுறு தன்மையாய தலைவன்” (நாரை) என ஞானசம்பந்தர் கூறுவர். மாயா நலம் - கெடாத பொலிவு. “திருநல வுருவின் மாயா வியற்கை பாவை” (நற். 201) எனச் சங்கச் சான்றோர் உரைப்பர். இயற்கை யழகுடன் செயற்கை வனப்பாற் பொலிவு குன்றாத ஒப்பனையுடன் வந்தமை விளங்க, “மாயா நலத்திற் காண வந்தால்” என்று கூறுகிறாள். கண்ட நமது மனத்தைக் கவர்ந்து கொண்டான்; நாம் நினைவிழந்து வருந்துவதைத் திரும்பியும் பார்க்கவில்லை என்பாளாய், “மருவும் நமது மனம் கவர்ந்து மாயா விரைவில் நமைத் திரும்பிப் பாரா தோடுகின்றார்” எனவும், நாமும் களைப்பின்றிப் பின் தொடர்ந்தும் அவர் நிற்கவில்லை என்றற்கு, “நாம் ஓயா தோடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க வொண்ணாது” எனவும் எடுத்துரைக்கின்றாள். (3)
|