1721.

     நிலவார் சடையார் திருஒற்றி
          நிருத்தர் பவனி தனைக்காண
     நலவா தரவின் வந்துநின்றால்
          நங்காய் எனது நாண்கவர்ந்து
     பலவா தரவால் நமைத்திரும்பிப்
          பாரா தோடு கின்றார்நாம்
     உலவா தோடி னாலும்அவர்
          ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

உரை:

      நங்கையாகிய தோழி, பிறைமதி தங்கும் சடையை யுடையவரும், திருவொற்றியூரில் எழுந்தருளும் கூத்தப் பெருமானுமாகிய தியாகேசரின் திருவுலாவைக் காண்டற் பொருட்டு நலம் பேணும் அன்புடன் வந்தேமாக, என்னுடைய நாணமாகிய பண்பைக் கவர்ந்து கொண்டு ஆசை பலவுற்று நம்மைத் திரும்பிப் பாராமல் ஓடுகின்றார். நாம் தளராமல் பின்னே ஓடினாலும், அவரது ஓட்டம் பிடிக்க வொண்ணாததாய் இருக்கிறது. எ.று.

     நிலவு - பிறைச் சந்திரன், கூத்தப் பிரானாதல் பற்றி “நிருத்தர்” என்று கூறுகிறாள். நல்ல ஆதரவு - நல ஆதரவு என வந்தது. பெண்மை நலம் கெடாதவாறு பேணும் அன்பினால் அவர் திருவுலாவைக் காண வந்தேம் என்பாள், “நல வாதரவின் காண வந்தால்” என நவில்கின்றாள். காண வழி மேனி வேறுபட்டுப் பெண்மை நலம் கெடும் என்பது கருத்து. கண்டபோது உயிரினும் சிறந்த நாணமாகிய பண்பைக் கவர்ந்து கொண்டு போயினார் என்பாளாய் “நாண் கவர்ந்து” என்றும், நாண் துறத்தல் மகளிர்க்கு மிக்க வருத்த முறுவிப்பதென எண்ணாமல், வேறு பல ஆசை கொண்டு நம்மைத் திரும்பிப் பாராதோடு கின்றார் என்றற்குப் “பல வாதரவால் நமைத் திரும்பிப் பாரா தோடுகின்றார்” என்றும் இயம்புகிறாள். “பெண் வழி நலத்தொடு பிறந்த நாணொடும், எண் வழி யுணர்வும் நான் எங்கும் காண்கிலேன்” (மிதிலைக் காட்சி) எனச் சீதை வருந்துவது காண்க. நாணிழந்த வருத்தத்தால் தளர்வுறாமல் பின்தொடர்ந்து ஓடினமை புலப்பட, “உலவா தோடினாலுமவர் ஓட்டம் பிடிக்க வொண்ணாதே” என வுரைக்கின்றார்.

     (4)