1722. நாடார் வளங்கொள் ஒற்றிநகர்
நாதர் பவனி தனைக்காண
நீடா சையினால் வந்துவந்து
நின்றால் நமது நிறைகவர்ந்து
பாடார் வலராம் நமைத்திரும்பிப்
பாரா தோடு கின்றார்நாம்
ஓடா தோடி னாலும்அவர்
ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
உரை: தன்கண் வாழ்வார் தேடி வருந்தாத மிக்க வளம் படைத்த திருவொற்றியூர்த் தலைவராகிய தியாகேசர் வரும் திருவுலாவைக் காண்பதற்கு நீண்ட ஆசையுற்று வந்து மகிழ்வோடு நின்றேமாக, நம்முடைய நிறையைக் கவர்ந்து கொண்டு, அவரைப் பாடிப் பரவுதற்குப் பேரார்வமுடைய நம்மைத் திரும்பியும் பாராமற் செல்லுகின்றார்; அவர் பின் ஓட மாட்டாமல் ஓடினாலும் அவரது ஓட்டம் பிடிக்க வொண்ணாததாய் இருக்கின்றது, காண். எ.று.
நாடா வளம் - தன்கண் வாழ்வார் நாடித் தேடி வருந்தா வண்ணம் மிக்க வளம். “நாடென்ப நாடா வளத்தன” (குறள்) என்ப திருவள்ளுவர். அங்குள்ள குடிகளும் “பதியெழு வறியாப் பழங்குடி” (சிலப். 1 : 15) எனச் சிறப்பிக்கப்படுவர். நாதர் - தலைவர். நீடு ஆசை - நெடு நாளாய் நிலவும் ஆசை. இந்த ஆசை மேலீட்டால் திருவுலாக் காண வந்து நின்றமை புலப்பட “நீடாசையினால் வந்து உவந்து நின்றால்” என்று மொழிகின்றாள். நிறை - மனத்தை ஆசை வழியோடாது ஒருமைக்கண் நிறுத்தும் அறிவுநலம்; நெஞ்சைக் கற்புநெறியில் நிறுத்த லென்பர் பரிமேலழகர். “நிறை யிழந்த வழி மகளிர் மனைவாழ்வு மாண்புறாதாகலின், மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை” (குறள். 57) எனத் திருவள்ளுவர் உரைக்கின்றார். திருவுலாவில் சிவபெருமானைக் கண்டவள், அவனது பேரழகில் ஈடுபட்டு நிறையிழந்தமைக்கு வருந்துகிறாளாதலின், “நிறை கவர்ந்து” என்கின்றாள். பாடார்வலர் - பாடுதலில் ஆர்வமுடையவர்; பாட்டார் வலர் என்ற பாலது பாடார் வலர் என வந்தது. பாடு என்பதற்குப் பெருமை யெனப் பொருள் கொண்டு பெருமை பெறுதலில் ஆர்வமுடையவர் என்பதும் ஒன்று. தியாகேசர் புகழ் பாடிப் பெருமை பெறற்கண் ஆர்வமுடைய நம்மைத் திரும்பிப் பாராது போகின்றார் என்றற்குப் “பாடார் வலராம் நமைத் திரும்பிப் பாரா தோடுகின்றார்” எனச் சொல்லுகிறாள். ஓட மாட்டாத நிலையுற்றும் ஊக்கத்தால் ஓடுதல் 'ஓடா தோடுதல்' எனப்படுகிறது. (5)
|