1723.

     அழியா வளத்தார் திருஒற்றி
          ஐயர் பவனி தனைக்காண
     இழியா மகிழ்வி னொடும்வந்தால்
          என்னே பெண்ணே எழில்கவர்ந்து
     பழியா எழிலின் நமைத்திரும்பிப்
          பாரா தோடு கின்றார்நாம்
     ஒழியா தோடி னாலும்அவர்
          ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

உரை:

      தோழியாகிய பெண்ணே, கெடாத வளமுடையவரும் திருவொற்றியூர்த் தலைவருமாகிய தியாகேசர் மேற்கொண்டு போந்த திருவுலாவைக் காணக் குறையாத மகிழ்ச்சியுடன் வந்தேமாக, இதனை என்னென்பது? எமது அழகைக் கவர்ந்து கொண்டு பழிக்க லாகாத வனப்புடன் நம்மைத் திரும்பிப் பாராமலே விரைந்து போகின்றார். விடாமல் தொடர்ந் தோடினாலும் அவரது ஓட்டம் பிடிக்க வொண்ணாததாய் இருக்கிறது காண். எ.று.

     கால வேறுபாட்டால் வளம் குறைவ தியல்பாயினும், சிவபெருமானது திருவருள் வளம் வேறுபடுவ தின்மை பற்றி “அழியா வளத்தார்” எனப் புகழ்கின்றாள். ஐயர் - தலைவர். இழியா மகிழ்வு - குறையாத மகிழ்ச்சி. உலாவைக் காண வந்த போதிருந்த மேனி நலம், கண்ட போது எய்திய வேறுபாட்டை நினைக்கின்றா ளாகலின், “என்னே” எனவும், “பெண்ணே” எனவும் கூறுகின்றாள். மேனியெழில் வேறு பட்டதால், “எழில் கவர்ந்து” என்றும், எழிலைக் கவர்ந்ததனால் எய்தும் பழியை எண்ணாமல் செம்மாப்புடன் தியாகேசர் சென்றது கூறலுற்று, “பழியா எழிலுடன் பாராதோடுகின்றார்” என்றும், எழிலிழந்த நம்மையேனும் ஏறிட்டு நோக்கினரோ வெனின், அது தானும் இல்லை யென்பாளாய், “நமைத் திரும்பிப் பாராதோடுகின்றார்” என்றும் இயம்புகிறாள். ஒழிந்தால் ஒழிக என விடாது பின் தொடர்ந் தோடியும் பயனில தாயிற்று என வருந்துவாளாய், “ஒழியா தோடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க வொண்ணாதே” என வுரைக்கின்றாள். ஒழிதல் : ஈண்டுக் கைவிடல் மேற்று.

     (6)