1724. திரையார் ஓதை ஒற்றியில்வாழ்
தியாக ரவர்தம் பவனிதனைக்
கரையா மகிழ்விற் காணவந்தால்
கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு
பரையா தரிக்க நமைத்திரும்பிப்
பாரா தோடு கின்றார்நாம்
உரையா தோடி னாலும்அவர்
ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
உரை: கடற் றிரையின் முழக்கத்தையுடைய திருவொற்றியூரில் எழுந்தருளும் தியாகேசருடைய திருவுலாவைக் குன்றாத மகிழ்ச்சியுடன் காண வந்தேமாக, எம்முடைய கற்பு நலத்தைக் கவர்ந்து கொண்டு, உடனிருக்கும் பரையாகிய உமாதேவியை உவப்பிக்க நம்மைத் திரும்பியும் பாராமல் போகின்றார்; அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் பின்னே யோடினாலும் அவருடைய ஓட்டம் பிடிக்க வொண்ணாததாய் இருக்கிறது, காண். எ.று.
திரை - கடலலைகள். கடற்றிரை கரையை மோதி முழக்கிய வண்ணம் இருத்தலின், “திரையார் ஓதை” என உரைக்கின்றாள். கரைதல் - மெல்லக் குன்றுதல். கரையா மகிழ்வு - நிறைந்த மகிழ்ச்சி. கற்பு நலம் - கற்பின் திண்மை. நமது திண்மை சிதைந்த தென்பாள், “கற்பின் நலத்தை கவர்ந்து கொண்டு” எனக் கூறுகிறாள். நமது நலம் கவர்ந்தமைக்கு உடனுறையும் உமாதேவி வெகுளுவள் எனக் கருதி அவளை மகிழ்விக்குமாற்றால் நம்மைத் திரும்பி நோக்காமல் செல்லுகிறார் என்பாளாய், “பரையா தரிக்க நமைத் திரும்பிப் பாரா தோடுகின்றார்” என்றும், அதுபற்றி வெகுண்டு ஒன்றும் சொல்லாது பின்னே ஓடினும் அவரது ஓட்டம் பிடிக்க முடியாதாயிற்று என்றற்கு, “உரையா தோடினாலுமவர் ஓட்டம் பிடிக்க வொண்ணாதே” என்றும் இசைக்கின்றாள். (7)
|