1725.

     கடுக்கா தலித்தார் திருஒற்றிக்
          காளை அவர்தம் பவனிதனை
     விடுக்கா மகிழ்விற் காணவந்தால்
          விரியும் நமது வினைகவர்ந்து
     படுக்கா மதிப்பின் நமைத்திரும்பிப்
          பாரா தோடு கின்றார்நாம்
     உடுக்கா தோடி னாலும்அவர்
          ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

உரை:

      விடத்தை விரும்பியுண்டவரும், திருவொற்றியூரில் இருந்தருளும் காளை போல்வாருமாகிய தியாகப்பெருமான் திருவுலாவை விடலாகாத மகிழ்ச்சியோடு காண வந்தேமாக, பலவாய் மிகுகின்ற நம்முடைய வினைகளைக் கவர்ந்து சென்று வீழ்த்தி, நன்மதிப்புடன் நம்மைத் திரும்பிப் பாராமல் ஓடுகின்றார்; நெகிழ்ந்த ஆடையை உடுக்காமலே பின்தொடர்ந்து ஓடினாலும், அவரது ஓட்டம் பிடிக்க வொண்ணாததாய் இருக்கிறது, காண். எ.று.

     கடு - விடம். இது கடல் கடைந்த காலத்து அதன்கண் எழுந்த விடம். இதனை யேற்று விரும்பி யுண்டமையின், “கடுக் காதலித்தார்” என்று கூறுகிறாள். காளைப் பருவ வடிவிற் காட்சி வழங்குவது புலப்பட, “திறாவொற்றிக் காளை” எனச் சிறப்பிக்கின்றாள். விடலாகாச் சிறப்புடைய தாகலின், மனமகிழ்ச்சியை, “விடுக்கா மகிழ்வு” என விளம்புகிறாள். நினைவு சொற் செயல்களால் எப்போதும் வினைகள் பெருகிய வண்ணமிருப்பது பற்றி “விரியும் வினை” என்றும், அவற்றால் பிறவித் துயரும் தொடர்பும் உண்டாதலின், அவற்றைப் போக்க வல்லவன் சிவபெருமானாதலால், அவன் செய்தருளும் அருணலத்தை, “விரியும் நமது வினைபடுக்கா” என்றும் இயம்புகிறாள். இனி, படுக்கா மதிப்பின் என இயைத்துக் கீழ்மைப் படுத்தாத நன்மதிப்புடன் என உரைப்பினும் அமையும். உலாக் காட்சியால் மனமும் உடையும் நெகிழ்ந்தமையின், நன்கு உடுக்காமல் விரைந்தமை விளங்க, “உடுக்கா தோடினாலும்” என வுரைக்கின்றாள்.

     (8)