1727.

     மடையார் வாளை வயல்ஒற்றி
          வள்ளல் பவனி தனைக்காண
     அடையா மகிழ்வி னொடும்வந்தால்
          அம்மா நமது விடயமெலாம்
     படையாற் கவர்ந்து நமைத்திரும்பிப்
          பாரா தோடு கின்றார்நாம்
     உடையா தோடி னாலும்அவர்
          ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

உரை:

      அம்மா நீர்மடையில் வாளை மீன் வாழும் வயல்களையுடைய திருவொற்றியூரில் எழுந்தருளும் வள்ளலாகிய தியாகேசர் வரும் திருவுலாவைக் காண்பதற்கு நிறைந்த மகிழ்ச்சியுடன் வந்தேமாக, நம்முடைய இந்திரியங்க ளெல்லாவற்றையும் படை கொண்டு கவர்வது போலத் தம்பாற் கவர்ந்து கொண்டு நம்மைத் திரும்பிப் பாராமல் விரைந்து செல்லுகின்றார்; நாம் தளராமல் பின்னே ஓடினாலும் அவரது ஓட்டம் பிடிக்க வொண்ணாத தாயிருக்கிறது, காண். எ.று.

     நான் சொல்லும் இதனைக் கேள் எனத் தோழிக்குக் கூறுகின்ற நங்கை, அவளை “அம்மா” என முன்னிலையில் அழைக்கின்றாள். நன்செய் வயல்களின் நீர்மடையில் உள்ள ஆழ்ந்த நீரில் வாளை மீன் வாழ்தலால், “மடையார் வாளை வயல்” என்று கூறுகின்றாள். அருளாளனாதலால் தியாகப் பெருமானை “வள்ளல்” என உரைக்கின்றாள். மனங் கொள்ளாத அளவிற் பெருகும் மகிழ்ச்சி, “அடையா மகிழ்வு” எனப்படுகிறது. விடயம் - கண், காது முதலிய இந்திரியங்கள். இவையும் கரணங்களாயினும், மன முதலிய உட்கருவிகளைக் கரணம் என்பதால், புறக்கருவிகளாகிய கண், காது முதலியவற்றை கருவி யெனவும், விடயம் எனவும் வழங்குப. உள்ளன அனைத்தையும் எஞ்சாமற் கவர்தற்குக் கள்வர் படை காட்டிப் பெறுவது போல இந்திரிய மனைத்தையும் எஞ்சாமல் பதியிந்திரிய மாக்கியதைப் புலப்படுத்தற்கு “விடய மெல்லாம் படையாற் கவர்ந்து” என்று கூறுகிறாள். உடைதல் - தளர்தல்.

     (10)