96. அருள் மொழி மாலை

திருவொற்றியூர்

    அஃதாவது பிச்சைத் தேவர் நங்கையின் மனைக்குப் போந்து கவர் பொருள்பட வழங்கி யருளிய மொழிகட்கு நங்கை தோழியோடு உரையாடி யுசாவுவதாம். தேவரது அருண் மொழிகளே பொருளாய் நின்று சொல் மாலையாவதால், இஃது அருண் மொழி மாலை என்ற பெயர் பெறுகிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1728.

     பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர்
          பூவுந் தியதென் முலையென்றேன்
     இதுவென் றறிநா மேறுகின்ற
          தென்றா ரேறு கின்றதுதான்
     எதுவென் றுரைத்தே னெதுநடுவோ
          ரெழுத்திட் டறிநீ யென்றுரைத்தார்
     அதுவின் றணங்கே யென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      அணங்கு போன்ற தோழி, யாவர்க்கும் நடு நின்று அருள்புரியும் பெருமானே, திருவொற்றியூரில் உள்ளவரே, என் முல்லைக் கொடி பூ மலர்ந்துளது என்ற கருத்தால் 'பூவுந்தியது' என்று சொன்னேன்; பூவுந்தியது என்ற இது நம் ஊர்தியாகக் கொண்டு ஏறுவது என்று அறிக என உரைத்தார்; நீவிர் ஏறுகின்றது எது என யான் கேட்டேன்; எது என்ற சொல்லின் நடுவே ஓர் எழுத்திட்டு அறிந்து கொள்க என்று சொன்னார்; இப்பொழுது அது என்னவாம்; அந்தத் தலைவர் சொன்ன அருள் மொழியை விளக்குக. எ.று.

           பொது - தில்லையம்பலம். அதன்கண் நின்றாடுகின்றாராகலின், “பொது நின்றருள்வீர்” எனக் கூறுகின்றாள். தில்லையம்பலம் இந்நாளிலும் 'பொது' என வழங்கும். பூவுந்தியது - பூவை வெளிப்படுத்தி மலர்ந்தது; பூப்போன்ற உந்தியை யுடையது என்றும் பொருள் படுவதால், பூவுந்தியது திருமால் என்று தேவரால் நினைக்கப்படுகிறது. “கமல வுந்தியுடை விண்ணவன்” (சிலப். 17) என இளங்கோவடிகள் உரைப்பது காண்க. முல்லை - இடைக் குறையாய் முலையென வந்தது. முலை பூவுந்தியது எனக் கொண்டு, முலை பீர்க்கம் பூப்போலப் பசலை கொண்டது என்றுமாம். பூவுந்தியது திருமால் எனக் கொண்டு, திருமாலாகிய ஏறு தேவர்க்கு ஊர்தியாதலால், “இதுவென் றறிநீ நாம் ஏறுகின்றது என்றார்” எனக் கூறுகின்றாள். பின்பு அவள், “ஏறுகின்றதுதான் எது” என்று கேட்டாளாக, எது என்ற சொல்லின் இடையே 'ரு' என்ற எழுத்தை யிட்டு எருது என்று அறிக என்பாராய், “எது நடுவோர் எழுத்திட்டறி நீ என்றுரைத்தார்” என்று கூறுகிறாள். அருள் மொழி - அருளிய சொல்லாட்டு. அணங்கு போல்வதால் தோழியை அணங்கே எனக் குறிக்கின்றாள். இப்பாட்டுச் சில மாறுபாடுகளுடன் இங்கித மாலையிலும் (1815) காணப்படுகிறது.

     (1)