173. செய்வ தன்றவன் சிறிய னென்றனை
வைவ ரன்பர்க ளென்னில் மத்தனேல்
உய்வ தெவ்வண முரைசெய் அத்தனே
சைவ நாதனே தணிகை மன்னனே.
உரை: தணிகை யரசே, சைவக் கோலத் தலைவனே, எனக்கு அத்தனே, என் பொருட்டுப் பரிந்துரைப்பார்க்கு அவன் சிறுமைப் பண்புடையனாதலால் அவன் விரும்பும் திருவருள் செய்யப்படுவ தன்று; செய்தால் மெய்யன்பராயினார் எம்மை வைவர் என்பாயாயின், நின் திருவருட் பித்துற்ற யான் உய்தி பெறும் வழியாதாம், உரைத்தருள்க, எ. று.
முருகன், குறிஞ்சி நிலவேந்தன் எனப்படுவதால், “தணிகை மன்னனே” எனப் புகழ்கின்றார். சிவக்கோலம் சைவம் எனப்படும். “சைவத்த செவ்வுருவன் திருநீற்றன்” (சுழியல்) எனவும், “அறையணி நல்லூர்ச் சைவனார்” எனவும், “ஐயாற தனிற் சைவனாகியும்” எனவும், “தாட் செய்ய தாமரைச் சைவன்” எனவும், சிவமூர்த்தத்தையே சான்றோர் சைவம் என்பது காண்க. இது செம்மென்னும் பண்படியாக வந்த செந்தமிழ் இயற்சொல்லென வுணர்க. பின்னர் இது சிவநெறிக்குரித்தாயிற் றென்க. சிவக் கோலம் பூண்டு சிவபிரானுக்கு உயர் ஞானம் உணர்த்திய புராணச் செய்தி கொண்டு “சைவ நாதன்” என்கின்றார். எனினும் பொருந்தும். சிறுமைப் பண்புடையார்க்குப் பெருமை மிக்க பொருளை நல்குவது தகவுடைய தாகாதென்பது பற்றிச் “செய்வதன்று அவன் சிறியன்” என்றும், தரமறிந்து நல்காமை குற்றம் என அன்பர்கள் குறை கூறுவர் என்றற்கு, “என்றனை வைவர் அன்பர்கள்” என்றும் முருகப் பெருமான் மொழிவதாகக் கொண்டெடுத்து மொழிகின்றார். என்னில், என்னாமை யுணர நின்றது. சிறியார்க்குப் பெருமை யுடையன நல்குதல் கூடாதென்பதை, “வந்தெனைப் பணி கொண்ட பின் மழக்கையிலங்கு பொற்கிண்ண மென்றலால் அரியையென்றுனைக் கருதுகின்றிலேன்” (சதகம்) என மணிவாசகப் பெருமான் கூறுவது காண்க. மத்தன்- அறிவு திரிந்தவன்; பித்தன், ஆசை மயக்குற்றவன். “பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து” (அண்டப்) எனவரும் திருவாசகத்தால் அறியலாம். திருவருள் புரிந்து என் அறிவை நெறிப்படுத்தாவிடின், எனக்கு உய்தியில்லை என்பார், “மத்தனேன் உய்வ தெவ்வணம் உரைசெய் அத்தனே” என்று உரைக்கின்றார். இது “சொல்லெதிர் பெறாது” சொல்லுதல் என்க.
இதனால் அருள் செய்யாவிடில் தனக்கு உய்தியின்மை கூறி முறையிடுமாறாம். (23)
|