1730.

     விட்டொற் றியில்வாழ் வீரெவனிவ்
          வேளை யருள நின்றதென்றேன்
     சுட்டுஞ் சுதனே யென்றார்நான்
          சுட்டி யறியச் சொல்லுமென்றேன்
     பட்டுண் மருங்கே நீகுழந்தைப்
          பருவ மதனின் முடித்ததென்றார்
     அட்டுண் டறியா ரென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      திருவொற்றியூரில் தங்கி வாழும் தேவரே, இவ்வேளையில் என் மனைக்கு வந்தருளியது என்னையோ என்று வினாவினேனாக, வேறு என்றது மன்மதனை எனக் கொண்டு சுட்டிக் கூறப்படும் வேளை அருளியவன் சுட்டப்படும் சுதன் என்று கூறினார். நான் குறித்தறியுமாறு சொல்லுவீராக என்று சொன்னேன்; பட்டாடை யணிந்த இடையையுடையவளே, நீ குழந்தைப் பருவத்தில் இருந்தபோது உன் தலையில் வைத்துப் புனையப்பட்டது என்று உரைத்தார்; சமைத் துண்டறியாத அவர், மொழிந்த அருள்மொழியின் பொருள் என்னையோ. எ.று.

     இரந்துண்டு வாழ்கின்றவராதலின் பிச்சைத் தேவரை “அட்டுண்டறியார்” என்ன கூறுகிறாள். 'இவ்வேளை' என்று அவள் சுட்டிக் கேட்டமையால், மதவேளாகிய மன்மதனைப் பெற்றருளியவன் சுட்டொடு கூடிய சுதனான அச்சுதன் என உரைக்கின்றார். மன்மதனை ஈன்றவன் திருமாலாகிய அச்சுதன் என்பதாம். “சுட்டி யறியச் சொலும்” என்று நங்கை கேட்டதை, நான் அறியச் சொல்லும் என்றதாகக் கொண்டு, சுட்டியென்னும் அணி, நீ குழந்தைப் பருவத்தில் இருந்தபோது உன் பெற்றோர் உன் தலையில் அணிந்து மகிழ்ந்தது என்பாராய், “நீ குழந்தைப் பருவம்தனில் முடித்தது” என மொழிகின்றார். இப்பாட்டு, சில மாறுபாடுகளுடன் இங்கித மாலையிற் (1816) காணப்படுகிறது.

     (3)