1732.

     உயிரு ளுறைவீர் திருவொற்றி
          யுள்ளீர் நீரென் மேற்பிடித்த
     வயிர மதனை விடுமென்றேன்
          மாற்றா ளலநீ மாதேயஞ்
     செயிர தகற்றுன் முலைப்பதிவாழ்
          தேவ னலவே தெளியென்றார்
     அயிர மொழியா யென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      சர்க்கரை போல் இனிக்கும் சொற்களைப் பேசுபவளாகிய தோழி, உயிர்க்குள் உயிராய் இருப்பவரே, திருவொற்றியூரில் இருப்பவரே, நீவிர் என்மேற் கொண்ட சினத்தை விடுக என்றேனாக, மாதே நீ எனக்கு மாறானவளல்ல; குற்றத்தை நீக்கும் உன் முலையை இடமாகக் கொண்ட தேவனாகிய இந்திரனல்ல; இதனைத் தெளிய வுணர்க என்கின்றார்; அந்த ஐயர் சொன்ன அருள் மொழியின் பொருள் என்னையோ. எ.று.

     உயிருக்குயிராய் நிற்றலால் சிவனை, “உயிருள் உறைவீர்” என்றும், திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளுதலின், “ஒற்றி யுள்ளீர்” என்றும் இயம்புகிறாள். உள்ளீர் - உள்ளே இருப்பவரே. வயிரம் - கோபம். சினந்தாற் போல் முகம் சிவந்து ஒழுகுதல் பற்றி, “வயிர மதனைவிடும்” என மொழிகின்றாள். மாற்றாள் - மாறுபட்டவள்; மறு மனைவியென்றுமாம். செயிர் - குற்றம். முலைப்பதி வாழ் தேவன் - இந்திரன்; இவன் “முலையிடங் கொள் செல்வன்” என்றலும் உண்டு. இந்திரனுக்கு வயிர வாள் படையாதலால், வயிரம் விடும் என்றதற்கு வயிரப் படையை எறிந்துவிடுக என்றதாகக் கொண்டமையின், யாம் வயிரப் படையேந்தும் இந்திரனல்ல என்பாராய், “யாம் முலைப்பதி வாழ் ே தவனல்ல” எனவும், குற்ற நினைவை விடுக என்றற்குச் “செயிர தகற்று” எனவும் உரைக்கின்றார். வயிரம் சினத்தைக் குறிப்பது பற்றி “மாற்றாளல்ல” என்று கூறுகிறார். இப்பாட்டு, இங்கித மாலையில் (1820) சில மாறுபாடுகளுடன் காணப்படுகிறது.

     (5)