1733. தண்கா வளஞ்சூழ் திருவொற்றித்
தலத்தி லமர்ந்த சாமிநுங்கை
யெண்கார் முகமாப் பொன்னென்றேன்
எடையிட் டறித லரிதென்றார்
மண்கா தலிக்கு மாடென்றேன்
மதிக்குங் கணைவில் லன்றென்றார்
அண்கார்க் குழலா யென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே.
உரை: நெருங்கிய கரிய கூந்தலையுடைய தோழி, குளிர்ந்த சோலைகளின் வளம் பொருந்திய திருவொற்றியூராகிய திருப்பதியில் எழுந்தருளும் சாமியாகிய தேவரே, நுமது கையிலேந்தும் வில் பெரிய பொன்னாம் என்றேனாக, அது எடையிட்டுக் காண்பது அரிய செயலாம் என்று கூறினார்; மண்ணவரால் விரும்பப்படுவது உம்முடைய ஊர்தியாக மாடு என்றேன்; சான்றோர் நன்கு மதிக்கும் அம்பு, வில்லன்று என வுரைத்தார்; அந்த ஐயர் சொன்ன அருள் மொழிக்குப் பொருள் என்னையோ. எ.று.
பூஞ்சோலைகள் தண்ணிய நிழல் தருதலின், “தண்கா” என்று சிறப்பிக்கின்றாள். தலம் - திருப்பதி. Êசாமி - தலைவர். “சீவக சாமி” என்பது போல. கார் முகம் - வில். உயர்வாக எண்ணப்படுவது பற்றி, “எண்கார்முகம்” என்கின்றாள். சிவன் ஏந்திய மலைவில், மேருவாகிய பொன்மலை எனப்படுவதால், “நுங்கைக் கார்முகம் மாப்பொன்” என்று கூறினாள்; மாப் பொன் - மா எடையுள்ள பொன் னென்றதாகக் கொண்டு, “எடையிட்டறிதல் அரிது” என வுரைத்தாராம். இடையிட்டறிதலென்றும் பாடம் காணப்படுகிறது; அதுவே பாடமாயின், தூக்கிடை வைத்து எடை காண்பது அரிது எனப் பொருள் கொள்ளப்படும். மாப்பொன் - மா எடையுள்ள பொன். மா - கழஞ்சு, தொடி எனப் பண்டை நாளில் வழங்கிய எடுத்தலளவை. மாடு - எருது; உருவ அழகால் மண்ணுலகோர் விரும்பப்படுவது உமது ஊர்தியாகிய எருது என்றாளாக, தேவர், மண்ணுலகை விரும்பி யுண்ட திருமாலாகக் கொண்டு, மலை வில்லுக்கு அவர் அம்பானதைக் குறிப்பாராய், “மதிக்கும் கணை; வில்லன்று” என வுரைக்கின்றார். கணை - அம்பு. மாடு என்பது பொன்னையும் குறித்தலால், பொன்மலையன்று என்பாராய், “மண் காதலிக்கும் மாடு வில்லன்று” என விதந்து கூறுகிறார். இப்பாட்டும், சில மாறுபாடுகளுடன் இங்கித மாலையில் (1821) காணப்படுகிறது. (6)
|