1734.

     அலங்கும் புனற்செய் யொற்றியுளீ
          ரயன்மா லாதி யாவர்கட்கும்
     இலங்கு மைகா ணீரென்றே
          னிதன்முன் னேழ்நீ கொண்டதென்றார்
     துலங்கு மதுதா னென்னென்றேன்
          சுட்டென் றுரைத்தா ராகெட்டேன்
     அலங்கற் குழலா யென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      மாலை யணிந்த கூந்தலை யுடையவளே, காற்றால் அலையசைக்கும் நீர் மிக்க வயல்களையுடைய திருவொற்றியூரிலுள்ள பிச்சைத் தேவரே, பிரமன் திருமால் முதலியவருக்கும் விளங்குகிற தலைவர் தாம் நீவிர் என்றேனாக, இதன் முன் ஏழ் என்பது சேரக் கொண்டவள் நீ என இசைத்தார்; துலங்குகின்ற அது என்னை என்று வினவினேனாக அது சுட்டுப் பெயராம் என்று கூறுகிறார்; அவர் சொன்ன அருள் மொழியின் கருத்து என்னையோ, கூறுக. எ.று.

     அலங்கல் - மாலை; பொன்னாலும் பூக்களாலும் தொடுக்கப்படும் மாலை என அறிக. அலங்குதல் - அசைதல். வயல்களில் தங்கும் நீரில் காற்றால் அலை தோன்றி அசைத்தலால், “அலங்கும் புனற்செய்” என உரைக்கின்றாள். செய் - வயல்; நன்செய், புன்செய் என்பது காண்க. இலங்கும் ஐ - விளக்கமுறும் தலைவர். காண் : அசை. ஐ என்பதன் முன் ஏழ் சேர, ஏழை என்பது எய்துதலால், நீ ஏழை என்பார், “இதன் முன் ஏழ் நீ கொண்டது” என்று தேவர் சொல்லுகிறார். பெண்களை ஏழை என்பது மரபு. அவ்வாறு கூறுவது என்ற கருத்தால், “துலங்கும் அது தான் என்” என்று நங்கை கேட்க, தேவர், அது என்ற சொல்லை மேற்கொண்டு, அது என்பது சுட்டுப் பெயர் என்பாராய், “சுட்டென் றுரைத்தார்” என்றும், கருத்து விளங்கக் கேளாத குற்றம் நினைந்து “ஆ கெட்டேன்” என்றும் உரைக்கின்றாள். இப்பாட்டும் சில மாறுபாடுகளுடன் இங்கித மாலையில் (1822) காணப்படுகிறது.

     (7)