1735. விண்டு வணங்கு மொற்றியுளீர்
மென்பூ விருந்தும் வன்பூவில்
வண்டு விழுந்த தென்றேனெம்
மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார்
தொண்டர்க் கருள்வீர் நீரென்றேன்
தோகாய் நாமே தொண்டரென்றார்
அண்டர்க் கரியா ரென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே.
உரை: திருமால் வணங்கி வழிபடும் திருவொற்றியூரில் உள்ள தேவரே, மெல்லிய பூ மலர்ந்திருக்கவும் வலிய இதழ்களையுடைய பூக்களில் வண்டுகள் படிகின்றன என்றேனாக, எமது மலர்போன்ற கையிலணிந்த வண்டும் விழுந்ததுகாண் என்று கூறுகின்றார்; நீவிர் தொண்டர்கட்கு வேண்டுவ தளிப்பீர் என்று நான் சொல்ல, மயில் போன்றவளே, நாமும் தொண்டரே என்று தேவர்கட்கு அரியவராகிய அவர் எனக்கு உரைக்கின்றார்; அந்த ஐயர் உரைத்த அருள் மொழியின் கருத்தென்னையோ. எ.று.
விண்டு - திருமால். மெல்லிய பூவைப் போல் திருவடி யிருக்கவும் அதனை நோக்காமல் நாணத்தால் என் கண்ணாகிய வண்டு வலிய நிலமாகிய பூவை நோக்குகிறது என்பாள், “மென்பூ விருந்தும் வன்பூவில் வண்டு விழுந்தது” என்றாளாம். “யான் நோக்குங்காலை நிலன் நோக்கும்” (குறள்) எனச் சான்றோர் கூறுவர். வண்டென்றதே கொண்டு, வளை யெனப் பொருள் கருதி, எமது மலர் போன்ற கைவளையும் கழன்று வீழ்ந்தது என்பாராய், “எம்மலர்க்கை வண்டும் விழுந்தது” என்று சொல்லுகின்றார், ஈண்டு மலர்க்கை யென்றது இடப்பாகத்து உமை நங்கையின் கையெனக் கொள்க. தொண்டர் என்ற இரண்டனுள் முன்னது சுந்தரரையும், நாவுக்கரசரையும் குறிக்கும்; பின்னது, தொண்டு செய்பவர் என்று பொருள்படும். அண்டர் - தேவர்கள். “தேவர்க்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருள்” என்று சான்றோர் சிவனைப் பரவுவர். இப்பாட்டும், இங்கித மாலையில் (1823) சில மாறுபாடுகளுடன் காணப்படுகிறது. (8)
|