1736.

     மாட்டார் மலர்க்கா வொற்றியுளீர்
          மதிக்குங் கலைமேல் விழுமென்றேன்
     எட்டா மெழுத்தை யெடுக்குமென்றா
          ரெட்டா மெழுத்திங் கெதுவென்றென்
     உட்டா வகற்று மந்தணர்க
          ளுரையூர் மாதே யுணரென்றார்
     அட்டார் புரங்க ளென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருவொற்றியூரில் உள்ள பிச்சைத் தேவரே, மதிப்பளிக்கும் என்னால் மதிக்கப்படும் கலையானது உங்கள் மேல் விழுமென்று சொன்னேன்; அவர் அதற்கு உனது கலை எட்டா மெழுத்தைச் சேர்த்துக் கொள்ளும் என்றார்; அது கேட்டு, இங்கு எட்டாம் எழுத்து யாது என்று வினவினேன்; அதற்கு, மனத்தின் வன்மையைப் போக்கும் அந்தணர்கள் வாழும் ஊராகும்; இதனை உணர்ந்து கொள்க என்று, பகைவர்களின் புரங்களை யழித்த அவர் விடை யிறுக்கின்றார்; அந்த ஐயர் சொன்ன அருள்மொழியின் கருத்து என்னையோ? எ.று.

      மட்டு - தேன். ஒருவர்க்கு நன்மதிப்பை யளிப்பது உடுக்கும் ஆடையாதலின், “மதிக்குங் கலை” யென்று சிறப்பிக்கின்றார். “மதிக்குங் கலை மேல் விழும்” என்பதற்குச் சந்திரனுக்குக் கலைகள் மேலும் மிகாது தேயும் எனினும் பொருந்தும். எட்டாம் எழுத்து - எட்டென்னும் எண்ணாகும் எழுத்து; அதாவது அகரம். அகரம் என்ற சொல் வேதியர் உறையும் ஊர்க்குப் பெயராதலின், “உட்டா வறுக்கும் அந்தணர்கள் உறையூர்” என உரைக்கின்றார். உள்தா - உள்ளத்தின் திருக்கை விளைக்கும் வலிமை. உண்ணாமை முதலிய விரதங்களால் மனத்தை ஒடுக்குவது பற்றி, “உள்தா வகற்றும் அந்தணர்” என விளம்புகின்றார். அட்டார் புரம், அசுரர்கள் வாழும் திரிபுரம். இப்பாட்டு, சில மாறுபாடுகளுடன் இங்கித மாலையில் (1824) காணப்படுகிறது.

     (9)