1737. ஒற்றி நகரீர் மனவாசி
யுடையார்க் கருள்வீர் நீரென்றேன்
பற்றி யிறுதி தொடங்கியது
பயிலு மவர்க்கே யருள்வதென்றார்
மற்றி துணர்கி லேனென்றேன்
வருந்தே லுணரும் வகைநான்கும்
அற்றி டென்றா ரென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே.
உரை: திருவொற்றியூரை யுடைய பிச்சைத் தேவரே, மனமாகிய குதிரையை யூர்வார்க்கே நீர் உமது திருவருளை வழங்குவீர் என்று சொன்னேனாக, வாசியைப் பற்றிச் “சி” என்று தொடங்கிச் சிவா என்று ஓதிப் பயில்பவர்க்கே யாம் திருவருள் வழங்குவது என்று மொழிந்தார். அது கேட்டு, நான் இதனை உணரமாட்டேன் ஆகின்றேன் என்றேனாக, அவர் நீ வருந்த வேண்டா, உணர்ந்து கொள்ளும் வகை நான்கையும் ஒழித்து விடுக என மொழிகின்றார். அத்தேவராகிய ஐயர் சொன்ன அருள் மொழிக்குப் பொருள் என்னையோ. எ.று.
உணரும் வகை நான்காவன; கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்பனவாம். நான் கற்கின்றேன் கேட்கின்றேன் என்பன போன்ற பசுபோதம் ஒழிந்த வழி ஞானம் இனிது உணரப்படும் என்பது கருத்து. இப்பாட்டு இங்கிதமாலையில் (1825) உளது. அங்கு, இதன் ஈறு “உள்ள வன்மையெலாம் எற்றில் உணர்தி என்கின்றார் இதுதான் சேடி என்னேடீ” என வேறுபடுகிறது. (10)
|