1739.

     தீது தவிர்க்கு மொற்றியுளீர்
          செல்ல லறுப்ப தென்றென்றேன்
     ஈது நமக்குத் தெரியுமென்றா
          ரிறையா மோவிங் கிதுவென்றேன்
     ஓது மடியர் மனக்கங்கு
          லோட்டு மியாமே யுணரென்றார்
     ஆது தெரியே னென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      துன்பம் துடைக்கும் திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் தேவரே, என் துன்பத்தை நீக்குவது எப்பொழுது என்றேனாக, இது நமக்குத் தெரிந்த ஒன்றேயாம் என்று சொன்னார். என் வினாவுக்கு நீர் சொல்லும் இது செவ்வன் இறையாகுமோ என்று கேட்டேன்; அதற்கு, என் திருப்பெயரை ஓதும் அடியார்களின் மன இருளைப் போக்கும் இறையாவார் நாமே என உணர்க என்றார்; அதன் கருத்தை நான் அறியேன்; அந்தத் தேவர் மொழிந்த அருண் மொழியின் பொருள்தான் என்னையோ! எ.று.

     இது சில வேறு பாடுகளுடன் இங்கித மாலையில் (1827) காணப்படுகிறது. இதன் விளக்க வுரையை ஆண்டுக் காண்க.

     (12)