174. மன்னும் நின்னருள் வாய்ப்ப தின்றியே
இன்னு மித்துய ரேய்க்கி லென்செய்வேன்
பொன்னி னம்புயன் போற்றும் பாதனே
தன்னி னின்றிடும் தணிகை மேலனே.
உரை: பொற்றாமரையில் உறையும் பிரமதேவன் வணங்கும் திருவடியை யுடையவனே, தன்னை யுணரும் உணர்வில் நின்று திகழும் தணிகை மலைத்தலைவனே, நிலைபெற்ற நின்னுடைய திருவருளைப் பெறுவதின்றி இன்னமும் இவ்வுலகியல் துன்பத்தின்கண் பொருந்துவதே எனக்கு உறுவதாயின், யான் என்ன செய்வேன்? எ. று.
பிரமன் வீற்றிருக்கும் பூ பொற்றாமரை என்றற்குப் “பொன்னின் அம்புயன்” என்று கூறுகின்றார். தன்னை யறிந்து தன்னையுடைய தலைவனை யுணர்வார்க்குச் சிவத்துடன் தானாதல் நிகழ்தலால், “தன்னில் நின்றிடும் தணிகை நாதன்” என்று கூறுகின்றார். “தன்னை யறிந்து சிவனுடன் தானாக மன்னும் மலம் குணம் மாளும்” (2, 31) என்று திருமூலர் திருமந்திரம் உரைக்கின்றது. ஏனைப் பொருட் செல்வம் போலாது அருட் செல்வம் நிலைபெறும் தன்மையுடைய தாதலால் “மன்னும் நின் அருள்” எனவும், திருவருட் பேறின்றி வாழ்தல் பயன்படாமையால் “நின்னருள் வாய்ப்பதின்றி” எனவும், அருளிலார்க்கு வாழ்வு துன்ப வாழ்வாதல் விளங்க, “இன்னும் இத்துயர் ஏய்க்கில்” எனவும், துன்ப வாழ்வில், அறிவும் ஆற்றலும் குன்றிக் கெடுவதால் ஒரு செயலும் பயன்படா தென்பது பற்றி, “என்செய்கேன்” எனவும் இயம்புகின்றார். ஏய்த்தல் - பொருந்துதல்.
இதனால் அருட் பேறு இல்லாத வாழ்வு இருளுறும் துன்ப வாழ்வாய்ச் செயலறவு எய்துவிக்கும் என்பதாம். (24)
|