1740.

     ஒண்கை மழுவோ டனலுடையீ
          ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர்
     வண்கை யொருமை நாதரென்றேன்
          வண்கைப் பன்மை நாதரென்றார்
     எண்க ணடங்கா வதிசயங்கா
          ணென்றேன் பொருளன் றிதற்கென்றார்
     அண்கொ ளணங்கே யென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      ஒள்ளிய கைகளில் மழுப்படையும், தீயும் உடையவராய்த் திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் உத்தமராகிய நீர், அருளை வளமாக வழங்கும் ஒருமைப்பண்புடைய தலைவராம் என்றேனாக, யான் வளவிய கைகள் பலவுடைய தலைவர் என்றுரைத்தார்; அதுகேட்டு எண்ணுதற் கடங்காத அதிசயமாக இருக்கிறது நீங்கள் கூறுவது என்றேன்; நான் சொல்வதற்கு நீ கருதுவது பொருளன்று என உரைத்தார்; எனக்கு அணுக்கமாக உள்ள தோழியே, அத் தேவர் மொழிந்த அருண் மொழியின் பொருள்தான் என்னையோ! எ.று.

     இப்பாட்டு, சில வேறுபாடுகளுடன் இங்கித மாலையிற் (1828) காணப்படுகிறது. விளக்கவுரை ஆண்டுக் காண்க.

     (13)