1741. ஒருவ ரெனவா ழொற்றியுளீ
ருமக்கம் மனையுண் டேயென்றேன்
இருவ ரொருபே ருடையவர்காண்
என்றா ரென்னென் றேனென்பேர்
மருவு மீறற் றயலகரம்
வயங்கு மிகர மானதென்றார்
ஆரார் சடைய ரென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே.
உரை: ஒருவரென்ற சிறப்புப் பெற்று வாழ்கின்ற திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் பிச்சைத் தேவரே, உமக்கு மனைவியருண்டோ என்று கேட்டேனாக, ஒரு பெயரே கொண்ட இருவர் உளர் என்று சொன்னார்; பெயரென்ன வென்று கேட்டபோது, என் பெயரொன்றில் பொருந்திய ஈற்றெழுத்துக் கெட, அயலெழுத்தாகிய அகரம் இனிது விளங்க இகரமாயிற்றென்றார்; நுணுகும் இடையையுடைய தோழி, அந்த ஐயராகிய தேவர் உரைத்த அருண்மொழியின் பொருள் என்னையோ. எ.று.
இது சிறிது வேறுபட்டு இங்கித மாலையில் (1829) காணப்படுதலால் உரை விளக்கத்தை அங்கே காண்க. அருவமாதல் - அருவுதல் என வந்தது. மகளிரிடை நுணுகி அருவமாதல் சிறப்பென்பர். (14)
|