1742. பேரா ரொற்றி யீரும்மைப்
பெற்றா ரெவரென் றேனவர்தம்
ஏரார் பெயரின் முன்பினிரண்
டிரண்ட கத்தா ரென்றாரென்
நேரா வுரைப்பீ ரென்றேனீ
நெஞ்ச நெகிழ்ந்தா லாமென்றார்
ஆரார் சடைய ரென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே.
உரை: புகழ்பெற்ற திருவொற்றியூரில் இருந்தருளும் பிச்சைத் தேவரே, உம்மைப் பெற்றவர் யாவரென்று கேட்டேனாக, எமது அழகிய பெயரின்கண் முன்னேயுள்ள இரண்டெழுத்தும் பின்னேயுள்ள இரண்டெழுத்தும் முன்பின்னாகச் சேர்த்து ஓதுவோர் எம்மைப் பெற்றோராவர் என்று சொன்னார்; இஃது இனிது விளங்க அமைத்து நேராகச் சொல்லுமின் எனக் கூறினேன்; நெஞ்சம் அன்பாற் குழைந்து ஓதினால் எம்மைப் பெறலாம் என்று, அந்த ஆத்தி மாலை சூடிய சடையையுடைய அத்தலைவராகிய ஐயர் சொன்னார்; அவர் சொல்லிய அருள் மொழிக்குப் பொருள் என்னையோ! எ.று.
இப்பாட்டு சில வேறுபாட்டுடன் இங்கித மாலையில் (1830) காணப்படுகிறது. அங்கே இதன் விளக்கம் காண்க. ஆர் - ஆத்தி மாலை. ஐயர் - தலைவர். (15)
|