1743. தளிநான் மறையீ ரொற்றிநகர்
தழைத்து வாழ்வீர் தனிஞான
வொளிநா வரைசை யைந்தெழுத்தா
லுவரி கடத்தி னீரென்றேன்
களிநா வலனை யீரெழுத்தாற்
கடலில் வீழ்த்தி னேமென்றார்
அளிநாண் குழலா யென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே.
உரை: கோயிலாக நான்கு மறைகளையு முடையராய்த் திருவொற்றியூர் செல்வத்தாற் பெருக வாழ்பவரே, ஒப்பற்ற சிவஞான வொளியையுடைய திருநாவுக்கரசரைத் திருவைந் தெழுத்தை யோதிக் கடலில் மிதந்து கரையேறச் செய்தீரன்றோ என்று விளம்பினேனாக, சிவபோகக் களிப்பையுடைய நாவலூர் நம்பியாரூரரை இரண்டெழுத்தாற் கடலிற் படிவித்தேம் என்று கூறுகிறார்; வண்டு கயிறாகப் பிணித்த கூந்தலை யுடையவளே, அவ்வையர் சொன்ன அருள் மொழியின் பொருள் என்னையோ. எ.று.
இதுவும் சிறிது வேறுபட்டு இங்கித மாலையில் (1831) காணப்படுகிறது. விளக்கம் அதன் உரையிற் காண்க. அளி - வண்டு; தேனினம் கயிறு போல வரிசையாக மொய்த்தல் பற்றி, “அளி நாண் குழல்” என வுரைக்கின்றாள். (16)
|