1744.

     ஓமூன் றெழிலீ ரொற்றியுளீ
          ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
     தாமூன் றென்பார்க் கயன்மூன்றுந்
          தருவே மென்றா ரம்மமிகத்
     தேமூன் றினநும் மொழியென்றேன்
          செவ்வா யுறுமுன் முறுவலென்றார்
     ஆமூன் றறுப்பா ரென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      ஓம் என்னும் பிரணவத்தின்கண் நிலையுற அழகராய்த் திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் பிச்சைத் தேவரே, உம்மையடைந்தவர்க்கு அருள் புரிவீரோ எனக் கேட்டேனாக, தா எழுத்து மூன்று கூட்டிக் கூறுபவர்க்கு அயலதாகிய தி என்ற எழுத்து மூன்று தருவேம் என்று சொன்னார்; அம்மம்ம, உம்முடைய மொழிகள் தேன் பொருந்தியுள்ளன என்று யான் மொழிந்தேன்; நினது சிவந்த வாயிடத்தே புன்னகை தவழ்கிறது என்று சொன்னார்; அந்த மூன்றாகிய மலங்களைப் போக்குவராகிய தலைவர் சொன்ன அருள் மொழிக்குப் பொருள் என்னையோ! எ.று.

     இதுவும் சிறிது வேறுபட்டு இங்கித மாலையில் (1832) காணப்படுகிறது. உரை விளக்கம் அங்கே காண்க. ஆ மூன்று என்றவிடத்துச், செய்யுட் கேற்ப அகரச் சுட்டு நீண்டது. மூன்று - மலம், மாயை, கன்மம் ஆகிய மூன்று. உயிரைப் பிணித்தல் பற்றி, இம் மூன்றையும் “அறுப்பார்” என்கின்றாள்.

     (17)